Wednesday, September 16, 2009

வரிகள் : ஒரு அறிமுகம்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், அரசின் வருமானத்தில் பெரும் பங்காற்றுவது Taxes எனப்படும் வரிகள் தான்.

வரிகள் தான் ஒரு நாட்டின் வருமானத்திற்கு ஆதார புள்ளி ஆகும். இந்த வரிகளால் தான், ஒரு அரசு தமது மக்களுக்கு பணியாற்ற, செயலாற்ற தேவையான நிதியினை பெறுகிறது. அதனால் தமது எல்லைக்குட்பட்ட வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களின் மீதும், நிறுவனங்களின் மீதும் வரிகளை விதிகிறது. தயாரிக்கப்படும் பொருட்களின் மீதும், இடத்தின் மீதும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களின் மீதும் , ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களின் மீதும் , மற்றும் இன்னும் பிற மறைமுக வரிகளும் விதிக்கப் படுகின்றன. இவ்வாறு சேகரிக்கபட்ட வரிகளைக் கொண்டு தான், அரசு சிறந்த நிர்வாகத்தையும், சிறந்த சேவையினையும் மக்களுக்கு வழங்குகிறது.
இவ்வாறு நம் மீது திணிக்கபடும் சில வரிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
வருமான வரி INCOME TAX

ஒரு நாட்டின் சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு குடிமகனும் , நிறுவனமும் வருமான வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். அதிகம் வருமானம் ஈட்டும் ஒருவர், அதிக வருமான வரியையும், குறைந்த வருமானமீட்டும் ஒருவர் , குறைந்த வரியையும் செலுத்துகிறார்கள். மிக குறைந்த, வருமான வரம்பு எல்லையை தொடாதவர்கள் , வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரி சதவிகிதம் அவ்வப் போது மாறுபடும், அதன் வருமான வரம்பை பொறுத்து...

இப்படிபட்ட வருமான வரி, 1812 ல் அமெரிக்காவில் நடைபெற்ற போரின் போது தான் விதிக்கப் பட்டது. ஏனென்றால், போரினால் அமெரிக்காவிற்கு 100 மில்லியன் டாலர் கடன் ஏற்பட்டது. அதனை சரிகட்டும் விதமாகத்தான் இந்த வரி விதிக்கப் பட்டது. ஆனால் போர் முடிந்த பின்னர் அப்படியே நடைமுறையில் விடப்பட்டது. இதை தான் , இன்று அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன.
நிறுவன வரி CORPORATE TAX

இது ஒரு நிறுவனத்தின் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். இதனின் வரிச்சதவிகிதம், அந்நிறுவனத்தின் லாப அளவில் ஏற்படும் வித்தியாசத்தைப் பொறுத்து மாறுபடும். நாட்டின் மத்திய அரசு மட்டுமல்லாமல், அதன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட நிறுவனங்களின் மீது வரிகளை விதிக்கும்.
கலால் வரி EXCISE TAX

இது பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுக வரி ஆகும். இவை நேரடியாக பொருட்களின் மீது விதிக்கப் படாமல் உற்பத்தியாளர் மற்றும் வணிகர்கள் மீது விதிக்கப் படுகிறது.
சொத்து வரி PROPERTY TAX

உள்ளூராட்சி, நகராட்சி முதலியன அதன் எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் மேல், அதன் மதிப்பை பொறுத்து விதிக்கும் வரி ஆகும். இப்படி சேகரிக்கப் பட்ட வரிகளைக் கொண்டு தான், ஒரு நகராட்சி அதனுடைய சாலை, குடிநீர் மற்றும் பள்ளிகூட வசதிகளை ஏற்படுத்தி கொள்ளுகின்றன.
விற்பனை வரி SALES TAX

இந்த வரி வணிக விற்பனையாளர்களால் அரசுக்கு செலுத்தப்படும் வரி ஆகும். பொருட்களை விற்கும் போதும், இடத்தை விற்கும் போதும் இவ்வரி விதிக்கப் படுகிறது. பொருட்களின் மதிப்பை பொறுத்தும்,விற்பனையின் அளவை பொறுத்தும் இதன் வரி சதவிகிதம் மாறுபடும். உண்மையில் இந்த வரி, நுகர்வோர் மீது தான் விதிக்கப்படும் மறைமுக வரி. பொருள் வாங்கும் நுகர்வோருக்கு இந்த வரி பற்றி தெரிவதற்க்கு வாய்பில்லை. பின்னர், பொருளை விற்ற விற்பனையாளர், தான் விற்ற தொகையிலிருந்து கிடைத்த வரிப் பணத்தை எடுத்து அரசுக்கு செலுத்துகிறார்.
சேவை வரி SERVICE TAX

அரசும், உற்பத்தி நிறுவனங்களும் அவை வழங்கிய சேவையின் அடிப்படையில் நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
ஏற்றுமதி வரி EXPORT TAX

உள் நாட்டில் உற்பத்தியான பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப்படும் வரி ஆகும். இவ்வரியை ஏற்றுமதி நிறுவனங்களால் செலுத்த்ப் படுகிறது.
இறக்குமதி வரி IMPORT TAX

வெளி நாட்டில் உற்பத்தியான பொருளை நம் நாட்டில் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப் படும் வரி ஆகும். இவ்வரியை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் செலுத்தப் படுகிறது.
இதனை சுங்க தீர்வை அல்லது சுங்க வரி எனலாம்.
மதிப்பு கூட்டபட்ட வரி VALUE ADDED TAX - VAT

இது நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும். பொருள் உற்பத்தியின் போது ஒவ்வொரு நிலையிலும் , அதன் மதிப்பிற்கு ஏற்றாற் போல் வரி விதிக்கப்படும். இப்படி கூட்டப் பட்ட வரிகளானது, பொருள் விற்பனைக்கு வரும் போது, அதனை நுகர்வோர் மீது விதிக்கப் படுகிறது. இத்தகைய வரி முன்பு மேலை நாடுகளில் மட்டும் தான் இருந்தது. தற்பொழுது இந்தியாவிலும் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
சொத்து மதிப்பு வரி AD VALOREM TAX

Ad valorem எனப்படும் இவ்வார்த்தை (Latin) லட்டின் மொழியிலிருந்து உருவானது. இதன் அர்த்தம் According to Value என ஆங்கிலத்தில் கொள்ளப்படும். இதனை நாம் சொத்து மதிப்பு வரி எனலாம்.
ஒருவர் தான் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை பொறுத்தோ அல்லது இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை பொறுத்தோ விதிக்கப் படும் வரி - சொத்து மதிப்பு வரி எனப்படும்.
இத்தகைய வரி தான் ஒரு நகராட்சிக்கு அல்லது நாட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறது.
வருமான குவிப்பு வரி ACCUMULATED EARNINGS TAX

ஒரு நிறுவனம் தன் வருமானத்திற்கு அதிகமான வருமானத்தை ஈட்டுவதாக கொள்வோம். அந்த வருமானத்தை அந்நிறுவனம் தன்னிடத்தே வைத்திருக்க முயலுமானால் அதற்கு அரசு வரி விதிக்கிறது. இதனை வருமான குவிப்பு வரி எனலாம்.
எனவே நிறுவனங்கள் இந்த வரியை கொடுக்காமலிருக்க லாப பங்கீடை( Divident) வழங்குகிறது. இவ்வாறு வழங்குவதால் நிறுவனங்கள், அரசுக்கு குறைந்த அளவிலேயே வரியை செலுத்துகிறது.
வரி DUTY

அரசு சில பொருட்களின் மீதும், வியாபார பரிவர்த்தனைகளின் போதும், வழங்கும் சேவையினை பொறுத்தும் சுமத்தும் வரி தான் இந்த டூட்டி ( Duty) எனும் சுமை வரி. இதனை ஒருபோதும் தனிநபர்களின் மேல் சுமத்தப்படுவதில்லை. மாறாக பல்பொருள் பரிவர்த்தனைகளின் போதும், நிதி பரிவர்த்தனைகளின் போது மட்டும் தான் விதிக்கப்படுகிறது.
மறைமுக வரி HIDDEN TAXES

இந்த மறைமுக வரிகள் நுகர்வோரின் அறிவுக்கு தெரியாமலே , அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய வரிகள், நுகர்வோருக்கு எதனால் விதிக்கப்படுகிறது என்பதை ஒருபோதும் தெரிவிக்கப் படுவதில்லை.
உதாரணம் : மதிப்பு கூட்டப் பட்ட வரி, விற்பனை வரி
வெகுமதி வரி GIFT TAX

ஒரு அரசு, தன் குடிமகன் ஒருவர், மற்றொருவருக்கு விலை உயர்ந்த பொருளை வெகுமதியாக கொடுத்தால் அதன் பேரில் ஒரு வரி விதிக்கிறது. அது தான் இந்த வெகுமதி வரி. இந்த வரியை வெகுமதி வழங்குபவர் தான் கொடுக்க வேண்டும். அத்தோடு அல்லாமல், பரிசு பெற்றவரும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வரி செலுத்த வேண்டும். இந்த வரி , சில சமயங்களில் சாதனை புரிந்த இந்தியருக்கு வழங்கப்பட்ட பரிசின் போது விலக்கப் படுகிறது.

1. டெண்டுல்கர்க்கு கிடைத்த பெர்ராரி (Ferrari) கார் மீது 2. ரவி சாஸ்திரி கிடைத்த அவ்டி (Audi) கார் மீது வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
அபராதம் LEVY

அரசுக்கு கட்ட வேண்டிய வரியை காலம் தாழ்த்தி கட்டினால் அதன் மீது விதிக்கப்படும் கட்டணம் தான் அபராதம் ஆகும்.
உதாரணம் : குடிநீர் வரி, மின்சார வரி, டெலிபோன் வரி போன்ற வரிகளை காலம் தாழ்த்தி செலுத்தினால் ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப் படும் என்பது நமக்கு வரும் மாதகட்டண சீட்டில் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த அபராதம் (Levy) லெவி எனப்படும்.
முத்திரை தீர்வு STAMP DUTY

ஒரு இடம் அல்லது மனை வாங்கும் போது, அதை (Document) பத்திரமாக மாற்ற , அந்த இடத்தின் மதிப்பிற்கேற்றார் போல , நாம் வாங்கும் முத்திரை தாளுக்கு செலுத்தும் தொகை தான் இந்த முத்திரை தீர்வு.
காலண்டர் வருடம் CALENDER YEAR

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை உள்ள காலம் காலண்டர் வருடம்.
வரி ஆண்டு TAX YEAR

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் , தங்களின் வருடாந்திர கணக்கு வழக்குகளை சமர்பிக்க தேர்ந்துதெடுக்கும் ஏதேனும் 12 மாதங்கள் அடங்கிய வருடம் வரி ஆண்டு எனப்படும்.

உதாரணம் : ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை.
பிஸிகல் ஆண்டு FISCAL YEAR

ஒரு நிறுவனம் தன் வருட கணக்குகளுக்காக உபயோகப்படுத்தும் வருடத்தின் ஏதாவது 12 மாதங்கள். அவை காலண்டர் வருடமாகவும் இருக்கலாம் அல்லது வரி ஆண்டாகவும் இருக்கலாம்.
முடிவு வருடம் TERMINAL YEAR

வருமான வரி செலுத்தும் ஒருவர் இறந்த வருடத்தை குறிக்கும் ஆண்டு முடிவு வருடம் எனப்படும்.
பிடித்தம் DEDUCTION

வருமான வரி செலுத்தும் போது அதில் காட்டப்படும் வருமானம் என்பது நிகர வருமானத்திலிருந்து மொத்த செலவைக் கழித்து மீதியுள்ள தொகை தான் , வருமானமாக காட்டப்படும். இப்படி மொத்த செலவை நிகர வருமானத்திலிருந்து பிடிப்பதற்கு பிடித்தம் என்கிறோம். இதனால் வருமான வரி குறைவாக செலுத்தப்படுகிறது.
ஒதுக்கீடு WRITE OFF

ஒரு நிதி நிறுவனம், ஒரு சிறு தொழில் செய்பவருக்கு கடன் வழங்குவதாக கொள்வோம். வாங்கியர், ஏதோவொரு காரணத்தினால் திவாலாகி விட்டால், அவரால் கண்டிப்பாக கடனை திருப்பி அளிக்க முடியாது.
அந்நிலையில் நிதி நிறுவனம், இப்படி திரும்பி வராக் கடனை, தன் கணக்கில் செலவாக காண்பித்து ஒதுக்கீடு செய்கிறது.இதனை தான் ஒதுக்கீடு என்கிறோம்.
முதலீட்டு லாபம் CAPITAL GAIN

நாம் வாங்கிய ஒரு பொருள் அல்லது இடம், அதன் முதலீட்டு விலையை விட அதிக மதிப்பில் அல்லது அதிக விலையில் இருந்தால் அதை முதலீட்டு லாபம் எனலாம். இந்த லாபத்தை, நாம் பொருளை அல்லது இடத்தை விற்றால் மட்டுமே அடையலாம்.
முதலீட்டு நட்டம் CAPITAL LOSS

நாம் வாங்கிய ஒரு பொருள் அல்லது இடம், அதன் முதலீட்டு விலையை விட குறைந்த மதிப்பில் அல்லது குறைந்த விலையில் இருந்தால் அதை முதலீட்டு நட்டம் எனலாம்.
திரும்ப பெறும் நிதி REFUND

ஒருவர் , அரசுக்கு அதிக அளவில் வருமான வரி செலுத்திய பின்பு, அரசு அவரது கணக்கை சரிபார்த்து , அதிக வரி செலுத்தி இருந்தால் , நியாயமான வரியை மட்டும் எடுத்து கொண்டு மீதியை ஒரு காசோலையாக பணத்தை திரும்ப அளிக்கிறது.
இப்படி திரும்ப அளிக்கும் தொகையை தான் திரும்பப் பெறும் நிதி (Refund) என்கிறோம்.
உபரி கட்டணம் SURCHARGE

ஒரு அத்தியாவசிய பொருள் அல்லது வாகனம் வாங்கும் போது கூடுதலாக ஒரு உபரி தொகை அல்லது உபரி வரி சேர்க்கப் பட்டிருக்கும். இதை உபரி கட்டணம் எனலாம்.
வரி ஏய்ப்பு TAX EVASION

வரி ஏய்ப்பு என்பது மிக பெரிய குற்றம் ஆகும்.
ஒருவர் அல்லது நிறுவனம் தான் கட்ட வேண்டிய வரி கட்டாமல் அல்லது கட்டுவதை தவிர்த்து வந்தால் , அது வரி ஏய்ப்பாக கருதப்பட்டு, அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும் , மிக பெரிய அபராத தொகையையும் விதிக்கும்.
வரி விடுமுறை TAX HOLIDAY

தொழிற் துறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணத்தில் அரசு கொடுக்கும் ஒரு சலுகை. சில சமயங்களில் அரசு. வரியில் தள்ளுபடி அல்லது வரியே இல்லாமல் செய்வது போல சலுகைகளை வழங்கும். இதனால் அந்நிறுவனங்கள் நல்ல பலனடைந்து , அதன் வளர்ச்சியை பெருக்கும்.
அரசு, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து , வெளி நாட்டு முதலீட்டாளர்களைக் கவரும்.
ஆண்டறிக்கை ANNUAL REPORT

1929 ம் ஆண்டு அமெரிக்க பங்குசந்தை பெரும் சரிவை அடைந்தது. அப்போது ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதில் அனைத்து நிறுவனங்களும் தங்களின் நிதி நிலை பற்றிய அறிக்கையை ஆண்டுகொருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்றது.
அதன் படி அந்த ஆண்டறிக்கையில் கீழ்கண்ட அம்சங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. அவைகள் பின்வருமாறு,
நிதி நிலை பற்றிய முக்கிய அம்சங்கள் பங்குதாரர்களுக்கு அனுப்பபட்ட கடிதங்கள் அனைத்து விவரங்கள், வரைவுகள், புகைப்படங்கள் நிர்வாகத்தின் விவாதங்கள், மற்றும் ஆராய்ச்சிகள் நிதி நிலை அறிக்கைகள் பற்றிய குறிப்புகள் தணிக்கையாளர் அறிக்கை நிதி பற்றிய அடிப்படை விவரங்கள் நிறுவன நிர்வாகிகள், இயக்குனர்கள் மற்றும் நிறுவனம் பற்றிய செய்திகள்/ தகவல்கள்.

1 comment:

  1. அவசர கடன் வேண்டும்?
    * உங்கள் வங்கி கணக்கில் மிகவும் வேகமாக மற்றும் அவசர பரிமாற்ற
    நீங்கள் பணத்தைப் பெற்ற பின்னர் * கொடுப்பனவு எட்டு மாதங்கள் ஆரம்பித்தது உங்கள்
    வங்கி கணக்கு
    * குறைந்த வட்டி விகிதங்கள் 2%
    * நீண்ட கால கொடுப்பனவு ( 1-30 ஆண்டுகள்) கால
    * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாதாந்திர பணம்
    * . எப்படி நீண்ட அதை நிதி எடுக்கும்? ஒரு கடன் விண்ணப்பம் பதிவு செய்த பின்னர்
    நீங்கள் எதிர்பார்க்க முடியும் என்று 24 மணி நேரத்திற்கும் குறைவாக ஆரம்ப நடவடிக்கையாக மற்றும்
    நாம் வேண்டும் தகவல் கிடைத்ததும் 72-96 மணி நேரத்திற்குள் நிதி
    நீங்கள் .

    முறையான மற்றும் உரிமம் பெற்ற கடன் நிறுவனத்தின் அதிகாரி தொடர்பு
    மற்ற நாடுகளில், என்று நிதி உதவி .
    இப்போது தொடர்பு மூலம் மேலும் தகவலுக்கு , கடன் விண்ணப்பம்

    மின்னஞ்சல்: maryrobert422@gmail.com

    ReplyDelete