Thursday, September 10, 2009

ஆப்ஷன் - பாகம் 2

ஆப்ஷன் உருவாக்கப் பட்டதே நஷ்டத்தை குறைப்பதற்கு (Hedge) தான். ஆனால் இந்த ஆப்ஷனினால் தான் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் பல கோடிகளை இழக்கிறார்கள். டிசம்பர் 19, 1997 அன்று நடந்த Silk Air விபத்துக்கு கூட ஆப்ஷன் டிரேட் தான் காரணம் என்று சொல்லப் படுகிறது. அந்த விமானத்தின் முதல் விமானி சூதாட்டக்காரன். அவன் கடன் வாங்கி Commodities மார்க்கெட்டில் ஆப்ஷனில் விளையாடினான். கோடிக்கணக்கில் நஷ்டம், கடன். அதிலிருந்து தப்பித்து தன் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைப்பதற்காக அவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவன் செய்தது தற்கொலை மட்டுமில்லை, 104 கொலை. "Silk air crash suicide" என்று தேடிப் பாருங்கள். ஆப்ஷனில் நஷ்டமடைய முதல் காரணம் பேராசை தான், அடுத்த காரணம் தன்னால் இழக்ககூடியதை விட பெருந்தொகையை முதலீடு செய்வது.

Call ஒப்பந்தத்தை பொருத்த வரை வாங்குபவரை விட விற்பவற்கு தான் ரிஸ்க் குறைவு. அதனால் வாங்குபவர் ஜாக்கிரதையாக டிரேட் செய்ய வேண்டும். பாகம் ஒன்றில் நாம் பார்த்த Microsoft ஆப்ஷனில் பங்கு விலையை விட அதிக விலைக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போடக்கூடாது. இது ஒரு அடிப்படை விதி. இதை மீறி ஆப்ஷனில் விளையாடுவது லாஸ் வேகாஸில் பணத்தை விட்டெறிவதை விட ஆபத்தானது. கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

இன்று MSFT (Microsoft) $24.78க்கு விற்கிறது. இந்த பங்கின் ஆப்ஷன் விலைகளை பார்ப்பதற்கு இங்கு செல்லவும். ஆப்ஷன் ஒப்பந்தம் போடுவதற்கு $2.50 அல்லது $5 வித்தியாசத்தில் வெவ்வேறு விலைகள் இருக்கின்றது. இந்த விலைகளை "Strike Price" என்று சொல்வார்கள். உதாரணமாக MSFT ஆப்ஷனை $5, $7.50, $10, ... $32.50 என்று வெவ்வேறு விலைகளுக்கு (Strike price) ஒப்பந்தம் போடலாம். ஒவ்வொரு Strike priceக்கும் Bid, ask என்று இரண்டு விலைகள் உள்ளன. Bid என்பது ஒப்பந்தம் விற்பவருக்கு கிடைக்கும் விலை. Ask என்பது வாங்குபவர் கொடுக்க வேண்டிய விலை. இந்த இரண்டு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை Spread என்று சொல்வார்கள், அது தரகருக்குப் போய் விடும். Strike Price உயர உயர ஆப்ஷனின் விலை குறையும்.

நவம்பர் 2005-ல் $20 விலைக்கான ஒப்பந்தத்தை $490க்கு வாங்கலாம். ஆனால் $27.50 விலைக்கான ஒப்பந்தத்தை $10க்கு வாங்கலாம். நவம்பர் 18, 2005க்குள் மைக்ரோசாப்ட் $30க்கு விற்றால், $27.50 விலைக்கான ஒப்பந்தம் $260க்கும் மேல் போய்விடும். $10 முதலீடுக்கு $250 லாபம். போட்ட பணத்துக்கு 25 மடங்கு லாபம் கிடைக்கிறது. இந்த leverage தான் ஆப்ஷன் பக்கம் நிறைய பேரை கண்களில் கனவுகளுடன் அழைக்கிறது. (ஒரு மாதத்தில் $10,000 முதலீடு செய்தால், $250,000 லாபம் கிடைக்கும்; அதை திரும்பவும் அடுத்த மாதம் முதலீடு செய்தால், $6 மில்லியனுக்கு மேல் பணம் கிடைக்கும், இரண்டு வருடத்தில் மைக்ரோசாப்டை விலைக்கு பேசலாம்.) ஆனால் $27.50 விலைக்கு ஒப்பந்தம் வாங்கியவர்களில் அத்தனை பேரும் போட்ட பணத்தை இழந்து விடுவார்கள். இந்த ஒப்பந்தங்களை விற்றவர்களுக்கு தான் லாபம்.

4 வாரங்களுக்குள் இந்த பங்கின் விலை $24லிருந்து $30க்கு போவதற்கு வாய்ப்பு மிக குறைவு. $27க்கு கூட எட்டாது. ஆனாலும் லாட்டரி சீட்டு வாங்குவது போல் நினைத்துக் கொண்டு இதில் நிறைய பேர் விளையாடுகிறார்கள். Call ஒப்பந்தங்களை வாங்குபவர்கள் சில விதிகளை கடைபிடித்தால் ரிஸ்க் குறைவு.

1. Call ஒப்பந்தம் வாங்கும் போது குறைந்தது 2 மாதத்திற்கு பிறகு உள்ள ஒப்பந்தங்களை வாங்க வேண்டும்.
2. பங்கு விற்கும் விலைக்கு குறைவாக உள்ள Strike price-ல் ஒப்பந்தம் வாங்க வேண்டும்.
3. Call வாங்கும் போதே உங்கள் risk tolerance எவ்வளவு என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

$500 முதலீடு செய்கிறீர்கள், எவ்வளவு லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள், எவ்வளவு நஷ்டத்தை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதையெல்லாம் "வாங்குவதற்கு முன்பே" தீர்மானித்து கொள்ள வேண்டும். ஒரு வேளை பங்கின் விலை சரிய ஆரம்பித்து விட்டால், ஒரு குறிப்பிட்ட விலைக்கு கீழ் ஆப்ஷன் விலை போய்விட்டால் அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு உடனே அந்த ஆப்ஷனை விற்று விட வேண்டும். OptionsXpress போன்ற தரகர்கள் Stop loss என்று ஒரு முறை வைத்திருக்கிறார்கள். $500க்கு அப்ஷனை வாங்குகிறீர்கள், உங்களால் $200 நஷ்டத்தை தான் சமாளிக்க முடியும் என்றால் ஆப்ஷனின் விலை $300க்கும் கீழ் போனால் விற்று விடும் படி Stop loss கொடுத்து விட வேண்டும்.

இது வரை நாம் பார்த்ததை விட இன்னும் கொஞ்சம் உள்ளடங்கிய விபரங்களை இனி பார்க்கலாம்.

Bid, Ask இரண்டு விலைகளும் குறிப்பிடுவது ஒரு பங்குக்கான ஆப்ஷன் விலை. ஒரு Call ஒப்பந்தம் நூறு பங்குகளுக்கு போடப் படுகின்றது. அதனால் Bid, Ask விலைகளை நூறால் பெருக்கி கொள்ளவேண்டும்.

Bid, Ask விலைகளுடன் Open Interest, Volume போன்ற விபரங்களையும் தரகர்கள் தருவார்கள். ஒரு குறிப்பிட்ட Call-ன் எத்தனை ஒப்பந்தங்கள் மார்க்கெட்டில் இருக்கின்றது என்பதை Open Interest காண்பிக்கும். இன்று எத்தனை ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன என்பதை Volume சொல்லும். Open Interest, Volume இரண்டுமே குறிப்பிட்ட ஆப்ஷன் எவ்வளவு பாப்புலர் என்று காட்டும்.

Call ஒப்பந்தங்களின் வெவ்வெறு வகைகளைப் பற்றி மீண்டும் பார்ப்போம்.

1. பாகம் ஒன்றில் பார்த்தபடி நீங்கள் பங்குகளை வைத்திருந்தால் அதற்கான் Call ஆப்ஷன் ஒப்பந்தங்களை விற்கலாம். இதற்கு Covered call என்று பெயர். Uncovered call என்றொரு விவகாரமான உத்தி ஒன்று இருக்கிறது, அதை வரும் பாகங்களில் பார்க்கலாம். Covered call விற்கும் போது பங்குகளை குறிப்பிட்ட விலைக்கு விற்க ஒப்புக் கொள்கிறீர்கள். Google பங்குகள் நூறை ஒரு பங்கு $300க்கு வாங்கி வைத்திருக்கிறீர்கள். அதன் டிசம்பர் 340 call ஆப்ஷனை $1700க்கு covered call விற்று விடுகிறீர்கள். டிசம்பரில் Google $440க்கு விற்றால் கூட, நீங்கள் $340க்கு அந்த பங்குகளை விற்று விட வேண்டும்.
2. நீங்கள் பங்குகளை சில மாதங்கள் கழித்து இன்றைய விலையில் வாங்க ஆசைப்பட்டால், அதற்கான call ஆப்ஷன் ஒப்பந்தங்களை வாங்கலாம்.
3. பங்குகளை வாங்க விருப்பமில்லை, ஆனால் ஆப்ஷனை வைத்து லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்படுபவர்கள் call ஆப்ஷன் ஒப்பந்தங்களை வாங்கலாம். ஆப்ஷனில் டிரேட் செய்பவர்களில் பெரும்பாலோர் இந்த வகையினர் தான். பணத்தை இழப்பவர்களில் பெரும்பாலானவர்களும் இந்த வகை தான்.
இன்னும் வரும்...

No comments:

Post a Comment