Thursday, September 10, 2009

ஆப்ஷன் - பாகம் 6

ஆப்ஷன் பாகம் ஐந்தை படித்த பிறகு என் நண்பர் கிண்டல் செய்தார் “அதென்ன வாகினி, ராகினி என்று பழைய பேரா எழுதுறீங்க? ஒரு சினேகா, ஒரு அசின்னு எழுதினால் நல்லாயிருக்குமே?!” வாகினி என்ற பெயரை உபயோகித்ததற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. பயப்படாதீர்கள், இது ஒன்றும் காதல் கதையல்ல!

நான் பகுதி நேர வகுப்பில் “Business Law” என்ற சட்ட சம்பந்தமான பாடம் படித்து வருகிறேன். இந்த பாடத்துக்கான புத்தகத்தில் பொருள் விற்பவரை “Sam the Seller” என்று கூறுகிறார்கள். பொருள் வாங்குபவருக்கு “Bob the Buyer” என்று பெயர். பிராடு செய்யும் ஆளுக்கு “Frank the Fraud” என்று பெயர். “Seller” மற்றும் “Sam” இரண்டுமே “S”-ல் ஆரம்பிப்பதால் “Sam” என்ற பெயரை படிக்கும் போதே அவர் “Seller” என்று புரிந்து விடும். இதே உத்தியை கையாண்டதன் விளைவு தான் “வாங்குபவர்” பெயர் வாகினி ஆகிவிட்டது. “விற்பவர்” விவேக்காகி விட்டார். இனிமேல் எழுதும் ஏதாவதொரு பதிவில் என் ஜொள்ளு நண்பருக்காக சிரிக்கும் சினேகா, அழகிய அஸின், நமட்டு சிரிப்பு நமீதா என்று எழுத போகிறேன்.

நீங்கள் முதல் முறையாக இந்த தொடரில் எட்டிப் பார்த்தால், பாகம் ஒன்றிலிருந்து தொடங்கவும்.

இந்த பாகத்திலும் அடுத்த பாகத்திலும் ஆங்கில வார்த்தைகள் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும். I have no other option :-) எந்தவொரு பங்கை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய ஆப்ஷன்களின் சாய்ஸ் நிறைய உள்ளது. உதாரணமாக IBM பங்குகளை எடுத்துக் கொண்டால் ஏப்ரல் 2006-க்கான் ஆப்ஷன்களின் எண்ணிக்கை மட்டும் 17. இன்று IBM $88க்கு விற்கிறது. $40-லிருந்து $120 வரைக்கும் வெவ்வேறு “Strike Price” உள்ளது. விபரங்களுக்கு இங்கு பார்க்கவும். http://finance.yahoo.com/q/os?s=IBM&m=2006-04 இதில் எந்த ஆப்ஷனை வாங்குவது அல்லது விற்பது? இந்த கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னால் சில டெக்னிக்கல் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1. விலை மாறும் தன்மை (Volatility):

சுருக்கமாக சொல்லப் போனால் ஒரு பங்கின் விலை எந்த அளவுக்கு மேலேயும் கீழேயும் போய் வருகிறது என்பதை குறிப்பது தான் “Volatility”. கூகுள் பங்குகள் ஒரே நாளில் $10 மேலே போகிறது அல்லது $10 கீழே விழுகிறது. அதனால் இந்த பங்குகளின் “Volatility ” அதிகம்.

Volatility-ல் இரண்டு வகை உண்டு. Historical Volatility (HV) மற்றும் Implied Volatility (IV). HV என்பது பங்குகளுக்காக. IV என்பது ஆப்ஷன்களுக்காக. கூகுளின் HV 31, IV 29. IBM பங்குகளுக்கு HV 13, IV 20. Volatility அதிகமாக அதிகமாக பங்குகளின் விலை நிலையாக இருக்காது, ஊசலாடும். Volatility அதிகமாக இருக்கும் நேரத்தில் ஆப்ஷன் பிரிமியம் அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் ஒரு நிமிடம் நிறுத்தி சிந்தித்துப் பாருங்கள்.

ஆப்ஷன் பிரிமியம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த ஆப்ஷனை வாங்குவது நல்லதா அல்லது விற்பது நல்லதா?

விற்பது தான் நல்லது. Covered Call விற்கலாம் அல்லது Put ஆப்ஷனை விற்கலாம். ஒரு பங்கின் Volatility எப்போதும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை. சில வருடங்களுக்கு முன்னால் மைக்ரோசாப்டின் Volatility அதிகமாக இருந்தது. இப்போது சாதாரண லெவலுக்கு போய்விட்டது. இன்னும் சில வருடங்களில் கூகுளின் Volatility -ம் சாதாரண லெவலுக்கு வந்து விடும்.

2. ஆப்ஷனின் உண்மையான விலையும் நேரத்தின் விலையும்:

நீங்கள் ஏப்ரல் 2006க்கான $80 Call ஆப்ஷனை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஆப்ஷனின் விலை (பிரிமியம்) $10.90.

IBM பங்கின் இன்றைய விலை $88.72.

$88.72 விலைக்கு விற்கும் பங்குகளை $80 விலைக்கு வாங்க $80+$10.90 = $90.90 விலை ஒரு பங்குக்கு கொடுக்க சம்மதிக்கிறீர்கள்.

ஏப்ரல் 2006-ல் இந்த பங்குகள் இதே விலைக்கு ($88.72) விற்பதாக வைத்துக் கொள்வோம். உங்களால் $80 விலைக்கு இந்த பங்குகளை வாங்க முடியும். நீங்கள் ஆப்ஷனுக்காக கொடுத்த $10.90 பிரிமியமும் வீண் கிடையாது. இந்த $10.90 பிரிமியத்தில் $8.72 ($88.72 - $80) உங்களுக்கு திரும்ப கிடைத்து விடுகிறது. மீதம் உள்ள $2.18 மட்டும் தான் காற்றில் கரைந்து விட்டது.

மேலே சொன்ன உதாரணத்தில் $8.72 என்பது "ஆப்ஷனின் உண்மையான மதிப்பு" (Intrinsic Value). $2.18 என்பது "நேரத்தின் மதிப்பு" (Time Value).

இன்று பங்குகள் $88.72க்கு விற்கும் போது $80 Strike price-ல் Call ஆப்ஷன் வாங்கும் போது Intrinsic Value $8.72 இருக்கிறது. இதுவே $90 Strike price-ல் Call ஆப்ஷன் வாங்கினால் Intrinsic Value எவ்வளவு இருக்கும்? பெரிய பூஜ்யம். வெறுமனே Time value மட்டும் தான் இருக்கும். இந்த ஒரு காரணத்துக்காகவே பங்குகளின் விலையை விட அதிகமாக உள்ள Strike price-ல் Call ஆப்ஷனை வாங்க கூடாது. (Covered call விற்கலாம், அதை வாங்குபவர் தானே கஷ்டப்பட போகிறார்)

Intrinsic Value இல்லாத ஆப்ஷனை வாங்குவது லாட்டரி வாங்குவதற்கு சமம். வெறும் Time Value மட்டும் இருக்கும் போது ஆப்ஷனின் விலை மிக குறைவாக இருக்கும், ஆனால் அதனால் எந்த பயனும் கிடையாது. ஆப்ஷன் பாகம் 1,2-ல் பார்த்த மைக்ரோசாப்ட் நவம்பர் 2005க்கான $30 Call ஆப்ஷன் ஞாபகம் உள்ளதா? அதை வாங்கிய அனைவருக்கும் நஷ்டம்.

3. In-the-money, Out-of-the-money, At-the-money and Where is my money?!

IBM பங்குகள் $88.72க்கு விற்கிறது. $85 அல்லது $85க்கும் குறைவான விலையில் உள்ள Call ஆப்ஷன்கள் "In-the-money (ITM)" என்ற பிரிவில் உள்ளன. Strike Price பங்கு விலைக்கு உள்ளே (within the price of stock) இருப்பதால் இப்படி பெயர்.

$90 அல்லது $90க்கும் அதிகமான விலையில் உள்ள Call ஆப்ஷன்கள் "Out-of-the-money (OTM)" என்ற பிரிவில் உள்ளன. Strike Price பங்கு விலைக்கு வெளியே (Outside the price of stock) இருப்பதால் இப்படி பெயர்.

பங்கு விலையும் Strike price-ம் ஒரே விலையில் இருந்தால் Call ஆப்ஷன்கள் "At-the-money (ATM)" பிரிவில் இருக்கும்.

Call ஆப்ஷன் வாங்கும் போது In-the-money Call options வாங்குவது தான் நல்லது. அதே போல Call ஆப்ஷன் விற்கும் போது Out-of-the-money Call options விற்றால் லாபம் பார்க்கலாம்.

Call ஆப்ஷனும் Put ஆப்ஷனும் எதிர் துருவங்கள். அதனால் Put ஆப்ஷனில் ITM (In-the-money) மற்றும் OTM (Out-of-the-money) அப்படியே உல்டாவாக மாறி விடும்.

IBM பங்குகள் $88.72க்கு விற்கிறது.

$90 Strike Price-ல் உள்ள Put ஆப்ஷன்கள் ITM வகையை சேர்ந்தவை.

$85 Strike Price-ல் உள்ள Put ஆப்ஷன்கள் OTM வகையை சேர்ந்தவை.

ATM(At the money) வகை மட்டும் Call ஆப்ஷனுக்கும் Put ஆப்ஷனுக்கும் ஒரே மாதிரி இருக்கும்
.
4. Delta:

ஒரு பங்கின் விலை ஏறும் போதோ அல்லது இறங்கும் போதோ எல்லா ஆப்ஷன்களும் ஒரே மாதிரி ஏறுவதோ அல்லது இறங்குவதோ கிடையாது. பங்கின் விலை மாறும் போது ஆப்ஷனின் விலை எப்படி மாறும் என்பதை காட்டுவது தான் “டெல்டா”.

மைக்ரோசாப்ட் இன்று $28க்கு விற்கிறது. ஜனவரி 2006க்கான $27.5 Call ஆப்ஷனுக்கான டெல்டாவின் மதிப்பு 0.67. மைக்ரோசாப்ட் பங்குகள் $1 மேலே போனால் இந்த ஆப்ஷன் விலை 67 பைசா மேலே ஏறும்.

பங்கு விலையை விட Strike Price அதிகமாக உயர உயர டெல்டா குறைந்து கொண்டே வரும். டெல்டா அதிகமாக இருக்கும் ஆப்ஷன்களை தான் வாங்க வேண்டும். பங்கின் இன்றைய விலை $90. அதன் $85க்கான Call ஆப்ஷனை $6 விலைக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆப்ஷனின் டெல்டாவின் மதிப்பு 0.75.

இந்த பங்கின் விலை நாளை $92க்கு உயர்ந்தால் உங்கள் ஆப்ஷனின் மதிப்பு $1.50 உயர்ந்து ஆப்ஷனின் விலை $7.50க்கு போய் விடும். போட்ட முதலீட்டுக்கு 25% லாபம் கிடைக்கிறது. $85க்கான Call ஆப்ஷனை வாங்காமல் $95க்கான Call ஆப்ஷனை நீங்கள் வாங்கினால் என்னவாகும்? $95 Call ஆப்ஷனின் விலை $1.50 என்றும் அதன் டெல்டா 0.1 என்றும் வைத்துக் கொள்வோம். பங்கின் விலை ஒரு டாலர் எறினால் இந்த ஆப்ஷனின் விலை 10 பைசா உயரும். பங்கின் விலை குறைந்த பட்சம் $4 உயர்ந்தால் தான் 25% லாபம் கிடைக்கும். அது போக OTM Call எல்லாவற்றுக்கும் வெறும் நேர மதிப்பு மட்டும் (Time Value) தான் இருக்கும், அதுவே பெரிய ரிஸ்க்.

5. Gamma:

பங்கின் விலை $1 (அல்லது Rs.1) அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ டெல்டா எவ்வளவு மாறும் என்பதை காட்டுவது Gamma.

டெல்டா என்பது காரின் வேகம் என்று எடுத்துக் கொண்டால், ஆக்சிலிரேட்டர் பெடல் எந்த அளவுக்கு மிதிக்கப் படுகிறது என்பதை சொல்வது Gamma.

6. Theta:

நாட்கள் செல்ல செல்ல ஆப்ஷனின் விலை எவ்வளவு குறையும் என்பதை Theta காட்டும். டிசம்பர் 2005க்கான ஆப்ஷனின் Theta அதிகமாக இருக்கும். ஆனால் ஏப்ரல் 2006க்கான ஆப்ஷனின் Theta குறைவாக இருக்கும்.

உதாரணம்

IBM December 2005, $85 Call ஆப்ஷனுக்கு Theta-வின் மதிப்பு -0.057.

IBM April 2006, $85 Call ஆப்ஷனுக்கு Theta-வின் மதிப்பு -0.021.

7. Vega:

Volatility மதிப்பு மாறும் போது ஆப்ஷனின் விலை எந்த அளவுக்கு மாறும் என்பதை காட்டுவது Vega.

ஆப்ஷனின் விலை எப்படி நிர்ணயிக்கப் படுகின்றது என்பதை பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் இங்கு செல்லவும். http://bradley.bradley.edu/~arr/bsm/model.html

ஆப்ஷனை கணக்கிடும் Java Applet இங்கு உள்ளது. US $ என்று இந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தாலும் எந்த நாட்டு சந்தைக்கும் இது பயன்படும். http://www.margrabe.com/OptionPricing.html

அமெரிக்க சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் Volatility மதிப்புகளை தெரிந்து கொள்ள http://www.ivolatility.com/ பயன்படும்.

மேலே நாம் கண்ட அத்தனை மதிப்புகளையும் அறிந்து கொள்ள ஒரு காலத்தில் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது ரொம்ப சிம்பிளாகி விட்டது. Optionsxpress தளத்தில் அத்தனை விபரங்களும் எனக்கு கிடைக்கிறது. இதே போல இந்திய பங்கு சந்தையின் தரகர் வலை தளங்கள் இருந்தால் சொல்லுங்கள், அந்த விபரங்களையும் இங்கு எழுதி விடலாம். எந்த ஒரு ஆப்ஷனையும் வாங்கும் முன்போ அல்லது விற்கும் முன்போ Volatility, Delta மற்றும் Gamma மதிப்புகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். Volatility-ஐ பொறுத்து ஆப்ஷனை வாங்குவதா அல்லது விற்பதா என்று முடிவு செய்யுங்கள். டெல்டாவின் மதிப்பை பொறுத்து எந்த ஆப்ஷனை வாங்குவது/விற்பது என்று முடிவு செய்யுங்கள்.

இந்திய பங்கு சந்தையில் டிரேடு செய்யப்படும் சில ஆப்ஷன்களைப் பற்றி எழுதலாம் என்று விபரங்களை தேடிப் பார்த்தேன். நல்ல விபரங்கள் எதுவும் சிக்க வில்லை. Indiainfoline.com என்ற தளத்தில் போனால் ஏப்ரல் 2005 மாதத்துக்கான விலைகளை மட்டுமே இந்த தளம் (http://www.indiainfoline.com/stok/infu/) காண்பிக்கிறது. ICICIdirect.com இன்னும் வேஸ்ட்.

http://www.indiainfoline.com/stok/opti/index.html என்ற சுட்டியில் எந்த பங்குகளுக்கு ஆப்ஷன்கள் டிரேடு செய்யலாம் என்று காண்பிக்கிறார்கள். ஆனால் இந்த ஆப்ஷன்களின் விலை எவ்வளவு என்று எங்கே தெரிந்து கொள்ள முடியும்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். அடுத்த பாகத்தில் நம் ஊர் ஆப்ஷன்களைப் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். SEBI வலைத்தளத்தில் “Lot size” என்பதைப் பற்றி வித்தியாசமாக எழுதியிருந்தார்கள். அமெரிக்க சந்தையில் ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் எபோதுமே 100 பங்குகளை கட்டுப்படுத்தும். ஆனால் நம் ஊர் பங்கு சந்தையில் ஒரு ஒப்பந்தத்துக்கான பங்குகளின் எண்ணிக்கை பங்குகளின் விலையை பொறுத்து மாறுபடுகிறது. எதையும் சிம்பிளாக விட மாட்டார்கள் போல இருக்கிறது.

அடுத்த பாகத்துடன் இந்த தொடர் முடியும்.

No comments:

Post a Comment