Thursday, September 10, 2009

ஆப்ஷன் - பாகம் 7

இந்திய பங்கு சந்தையில் ஆப்ஷன் விலைகள் பற்றி பயனுள்ள விபரங்களை தந்த R. ஜான் கிறிஸ்டிக்கு நன்றி! பாகம் 6-ன் பின்னூட்டத்தில் இந்திய சந்தையைப் பற்றிய விபரங்களை ஜான் எழுதியிருந்தார். இந்த பாகத்தில் இந்திய சந்தையில் விற்கும் ஆப்ஷன்களை உதாரணமாக காட்டியுள்ளேன்.

அமெரிக்க சந்தையில் ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் 100 பங்குகளை கட்டுப்படுத்தும். ஆனால் இந்திய சந்தையில் ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் கட்டுப்படுத்தும் பங்குகளின் எண்ணிக்கை பங்குகளின் விலையை பொறுத்து மாறுகிறது. சுலபமாக விளக்குவதற்காக இந்திய சந்தையிலும் ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் 100 பங்குகளை மட்டும் கட்டுப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். உதாரணமாக ACC ஆப்ஷன் ஒப்பந்தம் ஒன்று 750 பங்குகளை கட்டுப்படுத்துகிறது, ஆனால் இது 100 பங்குகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக வைத்துக் கொள்ளலாம். Just for consistency. அமெரிக்க சந்தையில் ஆப்ஷன்கள் மூன்றாவது வெள்ளியன்று காலாவதியாகும். இந்திய சந்தையில் கடைசி வியாழன்று பங்கின் ஆப்ஷன்கள் காலாவதியாகின்றது.

ஆப்ஷன் ஒரு அருமையான விஷயம். விபரம் தெரியாமல் காலை விட்டால் சில சமயம் இது விஷமாகவும் மாறி விடும். ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை மேலே போகும் என்ற தீவிர நம்பிக்கையில் தான் நிறைய பேர் Call ஆப்ஷன்களை வாங்குகிறார்கள். அதே போல பங்குகளின் விலை சரிய போகிறது, அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் Put ஆப்ஷன்களை வாங்குகிறார்கள். தான் வைத்திருக்கும் பங்குகளை பாதுகாப்பதற்காக Put ஆப்ஷன்களை வாங்குபவர்களை விட விலை சரிவின் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் Put ஆப்ஷன்களை வாங்குபவர்கள் தான் அதிகம்.

இப்படி Call ஆப்ஷன்களையும் Put ஆப்ஷன்களையும் வாங்குபவர்களின் கணிப்பு தவறி விட்டால் நிறைய நஷ்டம் ஏற்படும். ஆப்ஷன்களை முறைப்படி பயன்படுத்தினால் நஷ்டங்களை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தலாம். சிறு முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கையிலிருக்கும் முதலையும் இழந்து விடுவார்கள்.

அனுபவமுள்ள டிரேடர்கள் Spread என்ற சிறந்த உத்தியை பயன்படுத்தி தன் கணிப்பு

தவறினாலும் பணத்தை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

பொதுவாக பங்குகள் விலை உயரும் என்று நம்புவர்களை Bull என்றும் விலை சரியும் என்று நம்புவர்களை Bear என்றும் சொல்வார்கள். பங்குகள் விலை உயரும் அல்லது பங்குகள் விலை நிச்சயமாக கீழே விழப்போவதில்லை என்று நம்புவர்கள் Bull Put Spread என்ற உத்தியை கையாண்டால் லாபம் சம்பாதிக்கலாம்.
Bull Put Spread:

Bull Put Spread-ல் ஒரு குறிப்பிட்ட விலைக்கு Put ஆப்ஷன்களை விற்றுவிட்டு அதை விட குறைந்த விலைக்கு Put ஆப்ஷன்களை வாங்க வேண்டும். இதன் மூலம் கணிசமான லாபம் பார்க்கலாம்.
ஒரு உதாரணம்.

ACC நிறுவனத்தின் பங்குகளின் விலை Rs. 536

டிசம்பர் 29, 2005க்கான Rs. 540 Put ஆப்ஷனின் விலை Rs. 12.25

டிசம்பர் 29, 2005க்கான Rs. 530 Put ஆப்ஷனின் விலை Rs. 6.30

Rs. 540 Put ஆப்ஷன்கள் 10 ஒப்பந்தங்களை நான் விற்பதாக வைத்துக் கொள்வோம். எனக்கு கிடைக்கும் வருமானம் = 10 * Rs.12.25 = Rs. 12250.

(ஒரு பங்குக்கான ஆப்ஷன் விலை Rs. 12.25, ஒரு ஒப்பந்தத்தில் 100 பங்குகள், அதனால் ஒரு ஒப்பந்தத்துக்கு Rs. 1225 வருமானம்)

இந்த Put ஒப்பந்தங்களை விற்ற கையோடு டிசம்பர் 29, 2005 Rs. 530க்கான Put ஒப்பந்தங்கள் பத்தை நான் வாங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு நான் கொடுக்க வேண்டிய விலை = 10 * Rs.6.30 = Rs. 6300.

Rs. 540 Put விற்றதில் கிடைத்த வருமானம் Rs. 12250

Rs. 530 Put வாங்கியதற்காக கொடுத்த விலை Rs. 6300 என்னுடைய லாபம் = 12250 - 6300 = Rs. 5950

ACC பங்குகள் இறக்கை கட்டி பறக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டிசம்பர் 29, 2005 அன்று ACC நிறுவனத்தின் பங்குகள் Rs. 540க்கு குறையாமல் இருந்தாலே எனக்கு Rs. 5950 லாபம்.

ஒரு வேளை ACC பங்குகள் விலை Rs. 530க்கு கீழே சரிந்து விட்டால் என்னுடைய அதிக பட்ச நஷ்டம் Rs. 4050 மட்டும் தான். கொஞ்சம் விபரமாக பார்ப்போம்.

Rs. 540 Put விற்றேன், அதே சமயத்தில் Rs. 530 Put வாங்கி விட்டேன். பத்து ஒப்பந்தங்கள் விற்று / வாங்கியிருக்கிறேன். Rs. 540 Put ஆப்ஷன்களை என்னிடமிருந்து வாங்கியவர் அதை exercise செய்தால் நான் அவரிடமிருந்து ACC பங்குகள் ஆயிரத்தை Rs. 540 விலைக்கு வாங்க வேண்டும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நான் உடனே என்னிடம் உள்ள Rs. 530 Put ஆப்ஷனை exercise செய்து விடுவேன். எனக்கு Rs. 530 Put ஆப்ஷனை விற்றவர் என்னிடம் உள்ள ஆயிரம் ACC பங்குகளை ஒரு பங்கு Rs. 530க்கு வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்.

Rs. 5,40,000க்கு பங்குகளை வாங்கி Rs. 5,30,000க்கு விற்க வேண்டியிருக்கும், அதனால் Rs.10,000 நஷ்டம். Bull Put Spread செய்ததில் எனக்கு கிடைத்த லாபம் Rs. 5950. அதனால் என்னுடைய மொத்த நஷ்டம் 10000 - 5950 = Rs. 4050.

ACC பங்குகள் சரிந்து Rs. 10க்கு விற்றால் கூட என்னுடைய அதிக பட்ச நஷ்டம் Rs. 4050 மட்டும் தான். இந்த ட்ரேடை Spread செய்யாமல் Rs. 540 Put ஆப்ஷனை மட்டும் விற்றிருந்தாலோ அல்லது ஆயிரம் பங்குகளை Rs. 5,40,000க்கு வாங்கியிருந்தாலோ என்னுடைய நஷ்டம் எக்கச்சக்கமாயிருக்கும். ACC பங்குகள் Rs.10க்கு சரிந்தால் தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த ட்ரேடில் என்னுடைய அதிக பட்ச லாபம் Rs. 5950, அதிக பட்ச நஷ்டம் Rs. 4050.

லாபம், நஷ்டம் இரண்டும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. Spread-ல் மிக அதிக லாபம் பார்க்க முடியாது. அதே சமயத்தில் மிக அதிக நஷ்டமும் ஆகாது. கொஞ்சம் கொஞ்சமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

Spread செய்வதில் நிறைய பலன்கள் உள்ளன.

1. பங்குகளை வாங்குவதற்கு போட வேண்டிய முதலை விட Spread செய்வதற்குள்ள முதல் மிக குறைவு. மேலே கண்ட உதாரணத்தில் Strike price-க்களுக்கு உள்ள வித்தியாசம் Rs. 10000 மட்டும் தான் மார்ஜினில் கொடுக்க வேண்டியிருக்கும்.

2. Put/Call ஆப்ஷன்களை விற்க அனுமதிக்காத தரகர்கள் கூட Spread செய்ய அனுமதிப்பார்கள்.

3. டிசம்பர் 29 அன்று ACC பங்குகள் 540க்கு மேலே விற்றால் நான் செய்த Bull Put Spread தானாகவே முடிந்து விடும். நான் விற்ற ஆப்ஷன்களை திரும்ப வாங்க வேண்டிய அவசியமில்லை. அதனால் தரகர் கமிஷனும் மிச்சம்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக நஷ்டங்களுக்கு நாமே எல்லை வகுத்து விடலாம்.

சில பிரச்னைகளும் உள்ளது. பிரச்னைகள் இல்லாமல் ஒரு முதலீடா?!

1. ACC பங்கின் விலை Rs. 540க்கும் Rs. 530க்கும் இடையில் இருந்தால் விலையை பொறுத்து நஷ்டம் ஏற்படும். எப்படியிருந்தாலும் நஷ்டம் Rs. 4050க்கு மேலே இருக்காது.

2. என்னிடமிருந்து Rs. 540 Put வாங்கியவர் அதை டிசம்பர் 29க்கு முன்பே exercise செய்து விட்டால் கஷ்டமாகி விடும். இந்த Spread-ஐ திரும்ப வாங்கும் நிலைமை ஆகி விடும். Rs. 540 Put ஆப்ஷனை வாங்கி Rs. 530 Put ஆப்ஷனை விற்று இந்த Spread ட்ரேடை முடிக்க வேண்டியிருக்கும்.

படங்கள் உதவி: Optionsxpress.com, Cartoonbank.com

நவம்பர் 15 அன்று நான் ஆப்பிள் நிறுவன பங்குகளில் December $55/$50 Bull Put Spread செய்திருந்தேன். டிசம்பர் 16 அன்று ஆப்பிள் பங்குகள் $71க்கு விற்றது. அதனால் என்னுடைய Spread-ல் கிடைத்த லாபம் $300. நான் Bull Put Spread செய்யும் போது ஆப்பிள் பங்குகளின் விலை $60+. இந்த பங்குகள் அந்த விலையிலிருந்து $71 விலைக்கு உயராமல் $60 விலையிலே இருந்திருந்தால் கூட எனக்கு லாபம் தான். Bull Put Spread-ல் உள்ள பெரிய சௌகரியம் அது. பங்குகளின் விலை ஆடாமல் அசையாமல் இருந்தாலும் லாபம் சம்பாதிக்கலாம்!

ACC பங்குகள் கீழே விழும் என்று நம்புவர்கள் Bear Put Spread என்ற உத்தியை கையாளலாம். Bull Put Spread-ல் செய்ததை அப்படியே உல்டா செய்தால் அது Bear Put Spread ஆகி விடும்.
Bear Put Spread:

ACC நிறுவனத்தின் பங்குகளின் விலை Rs. 536

டிசம்பர் 29, 2005க்கான Rs. 540 Put ஆப்ஷனின் விலை Rs. 12.25

டிசம்பர் 29, 2005க்கான Rs. 530 Put ஆப்ஷனின் விலை Rs. 6.30

டிசம்பர் Rs. 540 Put ஆப்ஷன்கள் 10 ஒப்பந்தங்களை நான் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். என் செலவு = 10 * Rs.12.25 = Rs. 12250.

இந்த Put ஒப்பந்தங்களை வாங்கிய கையோடு டிசம்பர் 29, 2005 Rs. 530க்கான Put ஒப்பந்தங்கள் பத்தை நான் விற்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் என்க்கு கிடைக்கும் பணம் = 10 * Rs.6.30 = Rs. 6300.

Rs. 530 Put விற்றதில் கிடைத்த வருமானம் Rs. 6300

Rs. 540 Put வாங்கியதற்காக கொடுத்த விலை Rs. 12250
மொத்தத்தில் என் செலவு = 12250 - 6300 = Rs. 5950

ACC பங்குகள் டிசம்பர் 29, 2005-ல் Rs. 530க்கு கீழே விற்றால், எனக்கு லாபம் கிடைக்கும். எவ்வளவு லாபம் கிடைக்கும்? Rs. 530க்கு கீழே பங்குகள் விழுந்து விட்டால், என்னிடமிருந்து Rs. 530 Put வாங்கியவர் எனக்கு ACC பங்குகளை Rs. 5,30,000க்கு விற்று விடுவார். அந்த பங்குகளை என்னிடம் Rs. 540 Put விற்றவரிடம் Rs. 5,40,000க்கு என்னால் விற்று விட முடியும். அதனால் கிடைக்கும் லாபம் 5,40,000 - 5,30,000 = Rs. 10,000.

இந்த Spread-ல் என் செலவு Rs. 5950

எனக்கு கிடைக்கும் மொத்த லாபம் = 10,000 - 5950 = Rs. 4050

ஒரு வேளை இந்த பங்குகள் 540க்கு மேலே விற்றால் என்னுடைய அதிக பட்ச நஷ்டம் Rs. 5950 மட்டுமே. இந்த Spread-ஐ ஆரம்பிக்கும் போது போட்ட பணம் மட்டும் தான் நஷ்டமாகும்.

Put ஆப்ஷன்களை வைத்து Spread செய்வது போல் Call ஆப்ஷன்களை வைத்தும் Spread செய்யலாம். Bull Call Spread, Bear Call Spread என்று அதிலும் இரண்டு வகைகள் உள்ளன. அதிக விளக்கத்துடன் இல்லாமல் சுருக்கமாக அவற்றைப் பற்றி பார்ப்போம். மேலே கண்ட Bull Put Spread, Bear Put Spread புரியவில்லை என்றால் திரும்பவும் படித்து பாருங்கள். அவை நன்றாக பிடிபட்ட பிறகு Call Spread பற்றி படியுங்கள்.

Call Spreadக்கு Andhra Bank பங்குகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இந்த பங்குகள் Rs. 94க்கு விற்கின்றன. இந்த பங்குகளுக்கான ஆப்ஷன் ஒப்பந்தங்களும் 100 பங்குகளை மட்டும் கட்டுப்படுத்துவது கிடையாது. எளிதாக புரிவதற்காக ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் 100 பங்குகளை மட்டும் கட்டுப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம்.

ஆந்திரா வங்கியின் டிசம்பர் 29, 2005க்கான Rs. 95 Call ஆப்ஷனின் விலை Rs. 2.70; Rs. 100 Call ஆப்ஷனின் விலை Rs. 1.40
Bull Call Spread:

டிசம்பர் 29, 2005க்கான Rs. 95 Call ஆப்ஷன் ஒப்பந்தங்கள் பத்தை வாங்க வேண்டும். செலவு = 10 * 2.70 = Rs. 2,700

டிசம்பர் 29, 2005க்கான Rs. 100 Call ஆப்ஷன் ஒப்பந்தங்கள் பத்தை விற்க வேண்டும்.

வரவு = 10 * 1.40 = Rs. 1,400

இந்த Spreadக்கான மொத்த செலவு = 2,700 - 1,400 = Rs. 1,300

ஆந்திரா வங்கியின் பங்குகள் டிசம்பர் 29, 2005 அன்று Rs. 100க்கு மேல் விற்றால்: உங்களின் மொத்த லாபம் = Strike Priceகளுக்கு உள்ள வித்தியாசம் - நீங்கள் செய்த செலவு = 5,000 - 1,300 = Rs. 3,700.

இந்த பங்குகள் Rs. 95க்கு கீழே போய்விட்டால் உங்களின் அதிக பட்ச நஷ்டம் நீங்கள் செய்த செலவு Rs. 1300 மட்டுமே.
Bear Call Spread:

Bull Call Spread-ஐ உல்டா செய்தால் Bear Call Spread.

டிசம்பர் 29, 2005க்கான Rs. 100 Call ஆப்ஷன் ஒப்பந்தங்கள் பத்தை வாங்க வேண்டும்.

செலவு = 10 * 1.40 = Rs. 1,400

டிசம்பர் 29, 2005க்கான Rs. 95 Call ஆப்ஷன் ஒப்பந்தங்கள் பத்தை விற்க வேண்டும்.

வரவு = 10 * 2.70 = Rs. 2,700

இந்த Spread செய்ததால் கிடைத்த மொத்த வரவு = 2,700 - 1,400 = Rs. 1,300

ஆந்திரா வங்கியின் பங்குகள் டிசம்பர் 29, 2005 அன்று Rs. 95க்கு கீழே விற்றால், உங்களுக்கு கிடைத்த மொத்த வரவு Rs. 1300 உங்களுக்கு லாபம்.

இந்த பங்குகள் Rs. 100க்கு மேலே போய்விட்டால்: உங்களின் அதிக பட்ச நஷ்டம் = Strike Priceகளுக்கு உள்ள வித்தியாசம் - உங்களுக்கு ஏற்கனவே கிடைத்த வரவு = 5,000 - 1,300 = Rs. 3,700.

ஆந்திரா வங்கியின் பங்குகள் Rs. 500க்கு போனால் கூட உங்களின் அதிக பட்ச நஷ்டம் Rs. 3700.

ஆப்ஷன்களை முறைப்படி பயன்படுத்தினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் முதலீடு செய்த பணத்தை பாதுகாக்கலாம்.
Bharathi
Tamilnithi.blogspot.com

No comments:

Post a Comment