Wednesday, September 16, 2009

பரஸ்பர நிதி : ஒரு அறிமுகம்

பரஸ்பர நிதி என்றால் என்ன?

பரஸ்பர நிதி எனப்படுவது பொது மக்களிடமிருந்து பணத்தை திரட்டி, பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீட்டி, அதில் கிடைக்கும் லாபத்தை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பகிர்ந்தளிப்பது ஆகும் . இவ்வாறு திரட்டப்பட்ட பணத்தை நிதிநிறுவன மேலாளர்கள், தன் கீழ் இயங்கும் குழுவினை கொண்டு அலசி ஆராயப்பட்ட பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீட்டுவார்கள். இவ்வகை நிதி திட்டங்களில் சில நிதி நிறுவனங்கள், வங்கிகள், மற்றும் அயல் நாட்டு நிதி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. பரஸ்பரநிதி பங்குகள் “யூனிட்” என்ற அளவில் குறிக்கப்படும்.

இருக்கும் முதலீட்டு சாதனங்களில் சிறந்ததாக கருதப்படும் ஒரு வகையே பரஸ்பரநிதிகள். மற்றெந்த முதலீட்டு சாதனத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இது விலை குறைவானது மற்றும் முதலீட்டிற்கு சுலபமானது. நாம் தனியாக இருந்து பல்வேறு பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றை தேடிபிடித்து முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதிகளை குறைந்த விலையில் வாங்கிவிடுவதொடு, சுலபமாகவும் வாங்கி விடலாம். விரிவாக்கம் மற்றும் குறைந்த அபாயம். அதிக லாபம் ஆகியன இதன் மற்றைய சிறப்பம்சங்கள்.

இதை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள் , இப்படித்தான் இருக்கும் என்று பார்க்க நினைப்போருக்கும், இதுவரை இதில் முதலீடு செய்யாதவருக்கும் மற்றும் பரஸ்பரநிதியின் அடிப்படை பற்றி புரிந்து கொள்ள நினைப்பவருக்கும் இந்த கட்டுரை உபயோகமாக இருக்கும் என நினைக்கிறோம்.
சரி ஆரம்பிப்போமா ?

பரஸ்பர நிதியினை பற்றி அறியும் முன் சற்று பங்கு மற்றும் கடன் பத்திரங்களை பற்றி இங்கு பாப்போம் .
பங்குகள்

ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதன் மூலம் நாமும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிறோம். அந்நிறுவனம் தான் அடையும் லாபத்தை பகிர்ந்தளிக்கும்போது அதில் ஒரு பங்கு உங்களுக்கும் கிடைக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாம் இணைந்து தான் நடக்க வேண்டும். உங்களது பங்காக ஓட்டளிக்கும் உரிமை கிடைக்கிறது.
இவைகள் பங்கு சந்தையில் வாங்குவதற்கு எளிதாக கிடைக்கின்றன .
சில உதாரணம் :- ரிலையன்ஸ் , இன்போசிஸ், விப்ரோ போன்றவை.

கடன் பத்திரங்கள்

அடிப்படையில், ஒரு அரசு அல்லது ஒரு நிறுவனத்திற்கு பொது மக்களால் அளிக்கப்படும் கடன் தொகை ஆகும். அதற்கு கடன் பெற்ற நிறுவனங்கள், குறித்த காலத்தில் , குறித்த அளவில் வட்டி வழங்குவதாக ஒரு பத்திரத்தை கொடுக்கும். இதற்கு கடன் பத்திரம் எனப்படும். இது முதலீட்டுகளிலே மிகவும் பாதுகாப்பானது.

பங்குகள்,கடன் பத்திரங்கள் மட்டுமல்லாமல் வேறு சில முதலீட்டு சாதனங்களும் உள்ளன .. வீடு மனை வாங்கல் /விற்றல், வருடாந்திர சேமிப்பு பத்திரங்கள், விலைமதிப்புள்ள தங்கம், போன்ற உலோகங்கள் ஆகியவையும் பிறவகை முதலீட்டு சாதனங்களாகும் .
பரஸ்பர நிதிகள் வேலை செய்யும் விதம்

முதலீட்டாளர்கள் தம் பணத்தை ஒரு பரஸ்பரநிதி நிறுவனத்தின் சிறந்த ஒரு நிதி திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். அதை நிறுவன மேலாளர்கள் பங்குகளில்/கடன் பத்திரங்களில் முதலீட்டி அதில் கிடைக்கும் வருமானத்தை பகுதிகளாக பிரித்து வழங்குகிறார்கள் .

இந் நிதி திட்டங்களை இந்திய பங்கு வர்த்தக வாரியம் மற்றும் இந்திய பரஸ்பர நிதி சங்கம் போன்றவை கண்காணிக்கின்றன.
ஒழுங்கு முறை ஆணையங்கள்

முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் செபி என்னும் "இந்திய பங்கு வர்த்தக வாரியம்". இது பரஸ்பர நிதிகளை தான் வகுத்துள்ள கொள்கைகளை கொண்டு நெறிப்படுத்துகிறது . அப்போது வழி காட்டுதல் நடைவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

செபியினால் அங்கிகரிக்கப்பட்ட AMC ( ASSET MANAGEMENT COMPANY ) என்னும் சொத்து மேலாண்மை நிறுவனம் பரஸ்பர நிதியில் உள்ள பணத்தை பலவிதமான பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். கஸ்டடியன் எனும் பாதுகாப்பாளர்கள் கம்பெனி சாராத வெளி நபராய் இருக்க வேண்டும் என செபி அறிவுறுத்துகிறது. இப்படி செபியிடம் பதிவு பெற்ற பாதுகாப்பாளர்கள், பல நிதி திட்டங்களில் உள்ள நமது பங்குகளை தம் வசம் வைத்து பாதுகாக்கிறார்கள் . நிதி திட்டம் முடிந்தவுடன் நம் பணத்தை அன்றைய மதிப்பிட்டிற்கு தக்கவாறு திருப்பி அளிப்பார்கள் .

பரஸ்பர நிதிகளை முறையாக பயன்படுத்த ஒரு தனி சங்கம் உள்ளது. அதன் பெயர் இந்திய பரஸ்பர நிதி சங்கம் THE ASSOCIATION OF MUTUAL FUNDS IN INDIA ( AMFI )

இது பரஸ்பர நிதிகளை ஒரு கண்டிப்பான ஒழுங்குமுறை வட்டத்துக்குள் நிதிகளை கையாள வைக்கிறது. பரஸ்பர நிதியை பற்றின செய்திகளை மக்களுக்கு அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.இந்த சங்கம், பங்குவர்த்தக தொழில் மற்றும் நடவடிக்கைகளின் தரத்தை உயர்த்தும், மதிப்பிடுகள் அளிப்பதில் உண்மை நிலைகளை வெளிப்படுத்தல், தெளிவாக்குதல் போன்ற காரியங்களிலும் கவனம் செலுத்துகிறது.
இந்திய திரு நாட்டில் இருக்கும் பரஸ்பர நிதிகளின் வகைகள் :-

பரஸ்பர திட்டங்கள் ஒருவரின் பொருளாதாரத்தின் தன்மை தாங்கிக்கொள்ளும் ஆபத்தின் அளவு அல்லது எதிர்பார்க்கும் வருமானம் போன்ற அவரவர் தகுதிக்கேற்ப பல்வேறு திட்டங்களை வெளியிடுகிறது . அவை ஆயிரகணக்கில் உள்ளன. அதில் உங்களின் தேவையை பொறுத்து முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதியில் ஏற்கனவே இருந்து வரும் திட்டங்கள் – கட்டமைப்பு வாரியாக.
திறந்த முறை திட்டங்கள் OPEN ENDED SCHEMES மூடிய முறை திட்டங்கள் CLOSE ENDED SCHEMES இடைவேளை திட்டங்கள் INTERVAL SCHEMES
திறந்த முறை திட்டங்கள் OPEN ENDED SCHEMES

இவற்றை வருடத்தின் எந்த நாட்களில் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் . ஒரு நிலையான முதிர்வுகால தன்மை கிடையாது . நமக்கு அவசரமாக பண பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக இத்திட்டத்தில் இருந்து வெளியேறி விடலாம். Net Asset Value (NAV) எனப்படும் நிகர சொத்து மதிப்பு விலையில் , சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கலாம். இதன் முக்கிய அம்சம் எளிதில் பணமாக்கும் தன்மை .
மூடிய முறை திட்டங்கள் CLOSE ENDED SCHEMES

இத்திட்டம்ஒரு குறிப்பிட்ட முதிர்வு கால நிலைத்தன்மை உடையது. 3 முதல் 15 வருட வரையிலான முதிர்வு கால அவகாசம் உடையது. இதில் முதலீட்டிய பணத்தை, நாம் விரும்பிய பட , நம் தேவைகளுக்கென்று அவசரமாக வெளியில் எடுக்க முடியாது. இது நிலையான கால முதிர்வு நிலையின் முடிவில் மட்டுமே கிடைக்க கூடியது .

NEW FUND OFFER ( NFO ) எனப்படும் புதிய நிதி வெளியீட்டு சமயத்தில் இத்திட்டத்தில் சேரலாம். மற்றும் அதற்கு பின்னர் அந்த பங்குகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பங்கு சந்தையில் மட்டுமே வாங்கவோ , விற்கவோ முடியும்.

இந்த மூடிய முறையில், முதலீட்டாளர்கள் வெளியே வந்து விட வழியும் உள்ளது . இவ்வகையில் சில நிதிகளில் யூனிட்டுகளை பரஸ்பர நிதிக்கே (NAV) மொத்த சொத்து மதிப்பு விலையில் திரும்ப விற்றுவிட முடியும் ...கொஞ்சம் கொஞ்சமாக . செபி நெறிமுறைகள் இந்த மாதிரி ஒரு வழியை முதலீட்டாளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது.
இடைவேளை திட்டங்கள் INTERVAL SCHEMES

திறந்த முறை மற்றும் மூடிய முறை ஆகிய இரண்டின் கலப்பினம். பங்கு சந்தையிலும் விற்கலாம், திறந்த மார்கெட்டிலும் விற்கலாம், அல்லது மொத்த சொத்து மதிப்புக்கு நிகரான விலையிலும் விற்றுவிடலாம்.
பரஸ்பர நிதியில் இருந்து வரும் திட்டங்கள்
பங்கு நிதி EQUITY FUNDS கடன் பத்திர நிதிகள் DEBT FUNDS சமன் படுத்தப்பட்ட நிதிகள் BALANCED FUNDS
பங்கு நிதி - EQUITY FUNDS

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தம்மிடமுள்ள தொகையின் பெரும் பகுதியை பங்குகளில் முதலீடாக்குகிறது. இந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கட்டுக்கோப்பு, நிதி திட்டங்களுக்கு ஏற்பவும் , நிதி மேலாளரின் நோக்கத்தை பொருத்தும் மாறும் . இப்படிப்பட்ட பங்கு நிதி திட்டங்கள் ஒரு நீண்ட கால அடிப்படையில் தான் வகுக்கப்பட்டு கின்றன . இதனால் அத்திட்டத்தின் அபாயத்தின் அளவு குறைக்கப்படுவது மட்டும் அல்லாமல் அதிக வருமானத்தை தரக் கூடும் .
முதலீட்டு நோக்கத்தை பொறுத்து, பங்கு நிதிகள் மேலும் சிறு சிறு வகைகளாக பிரிக்கப்படும். அவையாவன :
பரவலாக்கப்பட்ட பங்கு நிதிகள் - Diversified Equity Funds மத்தியரக முதலீடு நிதிகள் - Mid Cap Funds துறைசார்ந்த நிதிகள் - Sector Funds வரி சேமிக்கும் நிதிகள் - Tax Savings Funds
கடன் பத்திர நிதிகள் DEBT FUNDS

இந்த நிதியின் தலையாய நோக்கம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதாகும். அரசு ஆணையங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவை இவ்வகை கடன் பத்திரங்கள் வழங்கும் . இவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு , நிலையான வருமானம் கிடைப்பதோடு , அபாயங்களின் பாதிப்பும் குறைவு .
இந்த கடன் பத்திரங்கள் கீழ் கண்டவாறு இன்னும் சிறு பிரிவுகளாக உள்ளன .
மிக நம்பகமான அல்லது தங்க முலாமிட்ட நிதிகள் Gilt Funds வருமான நிதிகள் Income Funds அதிக வருமான நிதிகள் MIPs - Maximum Income Plan குறைந்த கால திட்டங்கள் - Short Term Plans ( STP) உடனடி பணத் திட்டம் Liquid Funds
மிக நம்பகமான அல்லது தங்க முலாமிட்ட நிதிகள் GILT FUNDS

இவை இந்திய அரசினால் வெளியிடப்படும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும். வட்டி வருமானம் சிறிதும் தவறாத, அபாயம் சிறிதும் இல்லாத முதலீடு. ஒரே ஒரு அபாயம் அவ்வப்போது மாறும் வட்டி விகித மாற்றம். அரசின் பின்பலம் எப்போதும் இருப்பதால் இதில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகும்.
வருமான நிதிகள் INCOME FUNDS

இத்திட்டத்தில், பரஸ்பர நிதி தொகையின் பெரும்பகுதி நிறுவன கடன் பத்திரங்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு ஆகும். அது மட்டுமல்லாமல் ஒரு சிறு பகுதி பங்குகளுக்கும் ஒதுக்கப்படுகிறது.
அதிக வருமான நிதிகள் MAXIMUM INCOME PLAN - MIPs

அதிகபட்ச தொகையை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதுடன் ஒரு சிறு பகுதி பங்குகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. கடன் சாதனங்கள், மற்றும் பங்குகள் ஆகிய இரண்டு வகையின் அனுகூலமும் கிடைக்கிறது. மற்றெந்த கடன் திட்டங்களுக்கும் மேலாக இந்த திட்டம் அதிக அபாயம் மற்றும் அதிக வருமான வகையை சேர்ந்ததினால் உயர்வான திட்டமாக கருதப்படுகிறது.
குறைந்த கால திட்டங்கள் - SHORT TERM PLAN

இத்திட்டங்கள் மிக குறுகிய கால முதலீட்டு திட்டமாகும். குறைந்த பட்சம் மூன்று முதல் ஆறு மாத காலம் ஆகும். வணிக பத்திரங்கள் மற்றும், வைப்பு பத்திரங்கள் ஆகியவற்றில் செய்யப்படும். முதலீட்டில் ஒரு பகுதி, நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
உடனடி பணத் திட்டம் LIQUID FUNDS

பணசந்தை திட்டங்கள் என்றும் கூறப்படும். இதில் முதலீடு பாதுகாக்கப் படுவதுடன் சீக்கிரம் பணமாக மாற்றத்தக்க வல்லது. கஜானா பில்கள், வங்கிக்கு வங்கி மாற்றக்கூடிய சாதனங்கள், வைப்பு நிதி பத்திரங்கள் மற்றும் வணிக பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. இவை ஒருநாள் கால அளவு மட்டும் அல்லாமல் மூன்று மாத கால அவகாசத்திற்கு மட்டுமே செய்யப்படும். இதில் செய்யப்படும் முதலீடு குறைந்தபட்ச அபாயம் உடையதாக இருப்பதால், மற்ற முதலீட்டு திட்டங்களை விட இது மிகவும் பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டம் ஒரு குறுகிய காலத்தில் வருமானம் பார்க்க என்னும் நிதி நிறுவனகளுக்கு மிக பயனுள்ளதாக அமைக்கிறது.
சமன் படுத்தப்பட்ட நிதிகள் BALANCED FUNDS

பெயருக்கேற்றாற்போல், கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் சம அளவிற்கு முதலீடு செய்யும் திட்டமாகும். திட்டமிட்ட முதலீட்டு குறிக்கோளுடன் வளர்ச்சியை கருதி பங்குகளிலும், நிலையான வருமானம் தரும் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுவது. பங்குகளின் பாகம் வளர்ச்சியையும், கடன் பத்திரங்களின் பாகம் நிலையான வருமானத்தையும் தருவதால், இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு நிதிக்கும் ஒரு முதலீட்டு குறிக்கோள் தத்துவம் பின்பலமாக உள்ளது. இந்த குறிக்கோள்களை ஒட்டி ஒரு முதலீட்டாளர் தன் முதலீட்டு தேவையை அமைத்துக்கொள்ளலாம். பரஸ்பர நிதிகளை முதலீட்டு அளவுகோல் அடிப்படையில், இன்னும் பரவலாக வகைப்படுத்தலாம்.
முதலீட்டு அளவுகோல் அடிப்படைகள் பின்வருமாறு :
வளர்ச்சி திட்டங்கள் GROWTH SCHEMES வருமான திட்டங்கள் INCOME SCHEMES சமன்படுத்தப்பட்ட திட்டங்கள் BALANCED SCHEMES பணசந்தை திட்டங்கள் MONEY MARKET SCHEMES வரி சேமிப்பு திட்டங்கள் TAX SAVINGS SCHEMES குறியீட்டு எண் திட்டங்கள் INDEX SCHEMES துறை சார்ந்த திட்டங்கள் SECTOR SPECIFIC SCHEMES
வளர்ச்சி திட்டங்கள் GROWTH SCHEMES

இதன் பெரும்பகுதி பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், இவை பங்கு திட்டங்கள் எனவும் கூறப்படும். நீண்டகால அல்லது நடுத்தரகால அவகாசத்தில், முதலீடு செய்த பணம் உயர வேண்டும் என்ற திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டம். சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களால் இடை இடையே குறுகிய கால தொய்வு ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் உயரும் என்ற எதிர்பார்ப்பில் போடப்படுவது.
வருமான திட்டங்கள் : INCOME SCHEMES

இதன் பெரும் பகுதி அரசு கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுவதால் கடன் திட்டங்கள் எனவும் கூறப்படும். தொடர்ந்த நிலையான வருமானம் கொடுக்க எண்ணி அமைத்த திட்டங்கள். முதலீட்டு பெருக்கம் என்பது சிறிது குறைவு தான் என்றாலும் நிலையான வருமானத்தை தரவல்லது.
சமன்படுத்தப்பட்ட திட்டங்கள் BALANCED SCHEMES

நிலையான வருமானம் மற்றும் வளர்ச்சியை குறி வைக்கும் திட்டங்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிலைத்த வருமானம், அதே சமயம் முதலீட்டு பெருக்கம் இரண்டும் கொடுப்பது இதன் நோக்கம். வளர்ச்சி தரும் பங்குகள், நிலைத்த வருமானம் தரும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு சாதாரணமாக சரிசமமாக இருக்கும்.
பணசந்தை திட்டங்கள் MONEY MARKET SCHEMES

அளவான வருமானம், முதலீடிற்கு பாதுகாப்பு மற்றும் முதலீடு பெருக்கம், அதே சமயம் எளிதில் பணமாக்குதல் ஆகிய மூன்றும் கொடுக்கும் திட்டம். கஜானா பில்கள், வைப்பு நிதி பத்திரங்கள், மற்றும் வணிக பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறத . எளிதில் பணமாக்கக்கூடியதும், குறுகிய கால நோக்கிலும், முதலீடு பாதுகாப்பும் தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
வரி சேமிப்பு திட்டங்கள் TAX SAVINGS SCHEMES

இத்திட்டம் வரிச் சலுகை கருதியே ஆரம்பிக்கப்பட்டது. அவ்வப்போது அரசு வெளியிடும் அறிவிப்புகளின் படி, கிடைக்கும் வரி சலுகைகையை உபயோகப்படுத்தி முதலீடு செய்யப்படும் திட்டம். வருமானவரி சட்டம் பிரிவு 88 படி, பங்கு இணைந்த சேமிப்பு திட்டங்கள் ( ELSS) வரி தள்ளுபடிக்கு உள்ளாகும்.
குறியீட்டு எண் திட்டங்கள் INDEX SCHEMES

மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை ஆகியவற்றின் குறியீட்டு எண்களை பின்பற்றி அதில் முதலீடு மேற்க்கொள்ளப்படும் திட்டம். இத்திட்டத்தின் பட்டியலில் சந்தை குறியீட்டு எண்ணுக்கு உள்ளடங்கியுள்ள பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. மேலும் குறியீட்டு எண்ணில் உள்ள ஒரு பங்கின் கனமதிப்பை பொறுத்தே ஒவ்வொரு பங்கின் மீதான இத்திட்டத்தின் முதலீடும் அமைக்கிறது . இக்காரணங்களால் இத்திட்டத்தின் வருமான விகிதம் , பங்கு சந்தை குறியீட்டு எண்ணின் ஏற்ற , இறக்கங்களுக்கு தக்கவாறு பலனைத் தருகிறது .
துறை சார்ந்த திட்டங்கள் SECTOR SPECIFIC SCHEMES

பரஸ்பர நிதி இதழில், இத்திட்ட வெளியீட்டின் போது, இதன் முதலீடு இந்த தொழில் பிரிவு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என்பது குறிப்பிடப் பட்டிருக்கும். அவற்றில் மட்டுமே முதலீடு செய்யப்படும். உதாரணத்திற்கு: மென்பொருள், மருந்து, வேகமாக விற்று தீர்க்கும் நுகர்வோர் பொருட்கள், பெட் ரோலிய பொருட்கள் முதலியன .

இந்த பிரிவுகளின் செயல்திறனைப் பொறுத்து, இத்திட்டத்தின் வருமானம் இருக்கும். இவை அதிகமான லாபம் தரும் என்றாலும் ஆபத்தும் கூடவே கைகோர்க்கும். ஆகவே முதலீட்டாளர்கள் இந்த பிரிவு சார்ந்த தொழில்களின் செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தும் அதே சமயம், ஆபத்தை தவிர்க்க தக்க தருணத்தில் வெளியேறிவிடவும் வேண்டும்.
பரஸ்பர நிதி வருமானத்தின் வகைகள்
பரஸ்பர நிதியில் மூன்று வழிகளில் வருமானம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டி பங்குகளில் கிடைக்கும் லாபப்பங்கு மற்றும் நிதி திட்டங்களின் மூலம் கிடைக்கும் லாப வருமானம் ஆகியன.

பரஸ்பர நிதி நிர்வாகி, பங்குகள் விலை உயர்ந்தும் விற்காமல் வைத்திருந்தால், நீங்கள் உங்களின் பரஸ்பர நிதி பங்குகளை விற்றும் லாபம் பண்ணலாம்.

பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதால் உண்டாகும் நன்மைகள் முதலீடு செய்பவர் முதலில், இந்த நன்மை தீமைகளை மனதில் கொள்ள வேண்டும்.
பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதால் உண்டாகும் நன்மைகள்

தேர்ந்த நிர்வாகம் - தகுதி வாய்ந்த நிதி வல்லுனர்களை கொண்டு பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கப்படுகின்றன. பரஸ்பர நிதி அவர்களுக்கு சகாய விலையில் நிர்வாகம் செய்ய உதவுகிறது.

முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை திறம்பட நிர்வகிக்க போதிய சந்தை பற்றிய அறிவும், தெளிவும் மற்றும் திறமை இருக்காது. அதனால் பரஸ்பர நிதி திட்டங்களில் ஈடுபடுவது முதலீட்டாளர்களுக்கு நன்மையே.

பரவலாக்கல் - ஆபத்தின் ( Risk) அளவு ஆங்காங்கே பிரித்துவிடப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு சிரமம் குறைக்கப்படுகிறது.

பரவலாக்கம் என்பது நம் கையில் உள்ள பணத்தைக் கொண்டு கிடைக்கின்ற பல வேறுப்பட்ட பங்குகளில் / கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது ஆகும். இவ்வாறு செய்வதினால் நம் முதலீட்டிற்கு ஏற்பட உள்ள நஷ்டங்களை குறைக்கவோ முடியும். இப்படி பரவலாக்கம் செய்ய பரஸ்பர நிதி நிறுவனத்தின் மிக உதவியாக இருக்கின்றன.
பரவலாக்க யுக்தியின் படி இரண்டு சாதகங்கள் ,
பல்வேறு பட்ட பங்குகளை வாங்குவது எதாகிலும் நஷ்டம் ஏற்பட்டால், அதனை மற்ற பிரிவுகளில் வரும் லாபத்தை வைத்து ஈடு கட்டுவது. ஒட்டுமொத்தமாக பங்குகளை வாங்குவதால் பரிவர்த்தக செலவு குறையும்.

எளிதில் பணமாக்குதல் - ஒரு சாதாரண பங்கை எப்படி, விற்று பணமாக மாற்ற முடியுமோ அது போல பரஸ்பரநிதி பாகத்தையும் அப்போதைக்கப்போது விற்று பணம் பண்ணிவிடலாம்.

கையாள்வது மிக எளிது - முதலீடு செய்ய எளிது. குறைந்த பட்ச தொகை கொண்டு முதலீடு செய்ய முடியும். 2000 ரூபாய் மட்டுமே கூட போதும் -சில நிறுவனங்கள் மாதம் 50 ரூபாயில் கூட சேவை அளிக்கின்றன.
பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதால் உண்டாகும் பாதகங்கள்.

நிதி மேலாண்மை செய்பவரின் செயல் திறன் குறைபாடு - சந்தையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடுகிறாரோ என்ற சந்தேகம். அவர்களுடைய சேவை இன்றி செய்திருந்தால் நாமே நன்றாக முடித்திருப்போமோ என்ற ஐயப்பாடு.

அதிக சேவை கட்டணம் : மேலாண்மை செய்யும் நிறுவனத்திற்கு, பங்குகள் வாங்கும்போது மற்றும் விற்கும் போது கமிஷன் தொகை கட்ட வேண்டிஇருப்பது. சில சமயம் அதிக கட்டண வசூலும் ஏற்பட வாய்ப்புண்டு.

குழப்பம் : நிதிக்கு ஒதுக்கிய பணம் அனைத்தும் முதலீடு செய்யப்பட வேண்டும். சில சமயம் நல்ல நல்ல பங்குகள் மற்றும் முதலீட்டு சாதனங்களில் முடக்கிய பின் வேறு நல்ல முதலீட்டூ சாதனம் கிடைக்காமல், மீதம் இருக்கும் தொகையை என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பது .

வரிசுமை : நிதி மேலாளர் முதலீட்டாளர் வரிசுமை பற்றி கவலை படாமல் இருந்து விடுவது. ஒரு நல்ல "முதல் பெருக்கம் " உண்டாகிறது என்று, பங்குகளை விற்று முதலாக்கும்போது ஏற்படும் வரிசுமை முதலீட்டாளரை பாதிக்கும். ஏனென்றால், முதல் பெருக்கத்தினால் உண்டாகும் வரிச்சுமை அதிகமாகிவிடும்.
முதலீட்டாளர்கள் ஒரு நிதி திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன்னர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பின்வருமாறு :
முன்னும் பின்னும் நிலை மாறிக்கொண்டே இருக்கும் பங்கு சந்தையில், இந்த குறிப்பிட்ட நிதி திட்டம் கடந்த சில ஆண்டுகளில் திறம்பட நிர்வகிக்கப்பட்டு, நல்ல வருவாயை தேடித்தந்திருக்கிறது என்று தீர ஆராய்தல் அவசியம். தொழில்முறையில், முதலீட்டாளருக்கு நல்ல சேவை அளிக்கும், நல்ல நிர்வாகமும், மேலாண்மையும் இருக்கும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தல் நன்மை தரும். குறிப்பிட்ட காலத்திற்கு திட்டம் நடைமுறையில் உள்ளதா என்பதை கவனித்தல் அவசியம். மறைமுக வரிகள் இல்லாமல் அவ்வப்போது நிதி செயல்பாடுகளை வெளியிடும் நிறுவனமா என்பதை ஆராய்தல் முக்கியம். நிதி திட்டத்தின் நுழைவின் மற்றும் வெளியேற்றத்தின் போது கிடக்கும் லாபத்தை பாதிக்குமா என்பதை நன்கு கவனித்து முதலீட்ட வேண்டும்.

இதுவரை படித்ததிலிருந்து நீங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் இயங்கும் விதம் பற்றியும், பல வித நிதி திட்டங்களைப் பற்றியும் முழுமையாக தெரிந்து, புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறோம். அடுத்த பாடத்தில் சந்திக்கலாம்.

1 comment:

  1. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வணக்கம்
            நான் அவருக்கு அமைக்க முடிவு திருத்த சர்ச், அமெரிக்காவில் மிக பெரிய புரட்டஸ்தாந்து தேவாலயத்தில் மூத்த போதகர், நாம் ஒன்றாக வந்து சில மக்கள் நிதி ஆதரவு மற்றும் உதவிகளை சில பிட் வேண்டும் என்று பார்க்க வேண்டும் அமைச்சர் விக்டோரியா Osteen, பாஸ்டர் யோவேல் Osteen மனைவி இருக்கிறேன் நீங்கள் ஒரு விஷயமே இல்லை இருந்து ஆனால் நாம் என்ன உத்தரவாதம் நீங்கள் ஒரு கடன் தகுதி எங்கே 18 மேலே அனைவருக்கும், மூலம் நன்மை என்று ஒரு கடன் நிறுவனம், அது உங்கள் வழங்கப்படும் வங்கி கணக்கில் ஒரே நாளில் பட்டுவாடா,
    2% குறைந்த வட்டி விகிதம்
    நெகிழ்வான கடன் மற்றும் மாதாந்திர பணம் நிபந்தனைகள்

    விக்டோரியா Osteen கடன் வழங்கும் நிறுவனம், ஒரு கிரிஸ்துவர் கட்டப்பட்டது கடன் வழங்கும் நிறுவனம் இது சட்டப்படி மற்றும் அதிகாரப்பூர்வமாக உரிமம் கடன் நிறுவனம் தொடர்பு.
    மேலும் தகவலுக்கு Email- victoriaosteenloanfirm@gmail.com

    ReplyDelete