Thursday, September 10, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 6

இந்த பதிவில் EPS என்பதை பற்றி இன்னும் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்போம்.

EPS என்றால் என்ன என்பதை ஒரு உதாரணத்தை வைத்து பார்போம். ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் Rs.10,000/- . அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் மொத்த பங்குகள் 1,000 என்று வைத்துக்கொண்டால் ஒரு பங்குக்கான வருமானம் என்ன என்பதை கணக்கிட்டால் EPS கிடைக்கும். இந்த உதாரணத்தின்படி ஒரு பங்குக்கான சம்பாத்தியம் Rs.10/- அதாவது Net Profit/ Number of Shares (10,000/1,000). இந்த நிறுவனத்தில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கும் வருடத்திற்கு 10 ரூபாய் சம்பாதிக்கிறது என்று பொருள். இரண்டு நிறுவனத்தை நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது EPS ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. உதாரணமாக இரண்டு நிறுவங்களில், ஒவ்வொரு நிறுவனத்தின் வருட நிகர லாபம் Rs.10,000/- என்று வைத்துக்கொள்வோம். இதில் ஒரு நிறுவனம் 1,000 பங்குகளை வெளியிட்டிருக்கிறது இன்னொரு நிறுவனம் 2,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது. லாபத்தை வைத்து பார்க்கும்போது இரண்டு நிறுவனமும் சமமாக இருப்பதுபோல் தோன்றும், ஏனென்றால் இரண்டு நிறுவனமும் ஒரே அளவு லாபம் சம்பாதித்திருக்கிறது. ஆனால் EPS பார்த்தோமென்றால் முதல் நிறுவனத்தின் EPS Rs.10/- இரண்டாவது நிறுவனத்தின் EPS Rs.5/- மட்டுமே. நாம் முதல் நிறுவனத்தில் பங்கு வாங்கினோம் என்றால் நமது ஒரு பங்குக்கு 10 ரூபாய் வருட சம்பாத்தியம். அதே நேரத்தில் இரண்டாவது நிறுவனத்தில் பங்கு வாங்கினோம் என்றால் ஒரு பங்கின் சம்பாத்தியம் 5 ரூபாய் மட்டுமே. அதிக வருமானம் இருக்கும் நிறுவனத்தில் தான் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது அடிப்படை. ஆக முதலாவது நிறுவனம் இரண்டாவது நிறுவனத்தை விட நல்ல நிறுவனம் என்று முடிவு செய்ய EPS தான் உதவும். எனவே EPS மிக மிக முக்கியம்.

EPS என்பது வருடாவருடம் கூடிக்கொண்டே இருக்கவேண்டும். குறைந்தபட்சம் பணவீக்கத்தை சமன் செய்யும் அளவாவது கூடி இருக்க வேண்டும். EPS கூட வேண்டும் என்றால் நிகர லாபம் கூடவேண்டும். ஆனால் சில நிறுவனங்களில் பார்த்தோமென்றால் நிகரலாபம் கூடி இருந்தாலும் EPS குறைந்திருக்கும். இது ஏன் என்று பார்போம். நாம் ஏற்கனவே பார்த்த உதாரணத்தின் படி நிகரலாபம் Rs.10,000,௦௦௦/- அது வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1,000 இந்த ஆண்டு EPS Rs.10/- . இதே நிறுவனம் அடுத்த ஆண்டு Rs.15,000௦௦௦/- லாபமாக சம்பதிதிருக்கிறது என்றால் இரண்டாமாண்டு EPS Rs.15/-. ஒருவேளை இந்த நிறுவனம் இரண்டாமாண்டில் மேலும் பங்குகளை வெளியிட்டிருந்தால் EPS பாதிக்கப்படும். உதாணரமாக இந்த நிறுவனம் இரண்டாமாண்டில் 1,000 பங்குகளை வெளியிட்டிருந்தால் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 2,000, நிகர லாபமோ Rs.15,000/- ஆக EPS Rs.7.50 ஆக இருக்கும். இரண்டு ஆண்டுகளிலும் EPS மட்டுமே ஒப்பிட்டு பார்தோமென்றால் இரண்டாமாண்டு நிறுவனம் சரிவில் இருப்பது போல் தோன்றும், ஆனால் உண்மையிலேயே இரண்டாமாண்டு இந்த நிறுவனம் 50% வளர்ச்சி அடைந்திருக்கிறது. சரி அதிக பங்குகளை வெளியிட்டால் நிறுவனத்திற்கு பணம் உள்ளே வந்திருக்கவேண்டும், அந்த பணத்தை வைத்து லாபம் சம்பாதித்து இந்த நிறுவனம் EPS-ஐ கூட்டி இருக்கவேண்டுமே... இது ஏன் நடக்கவில்லை என்று நாம் கவனிக்கக் வேண்டும். ஒருவேளை இன்னொரு தொழிற்கூடம் கட்ட இந்த பணத்தை உபயோகித்தார்கள் என்றால் அந்த தொழிற்கூடம் உற்பத்தியை ஆரம்பிக்கும்வரை, பங்குமூலமாக திரட்டிய பணத்தால் வருமானம் இருக்காது என்பதால் EPS குறைவாகவே இருக்கும். இந்த சந்தர்பத்தில் நாம் நிகரலாபம் குறையாமலிருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இதுமட்டுமின்றி Bonus Share என்று சொல்லப்படும் இலவச பங்குகளை நிறுவனம் ஏற்கனவே இருக்கும் பங்குதாரர்களுக்கு கொடுத்திருந்தாலும் நிறுவனம் வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை கூடி அது EPS-ஐ குறைக்கும். சரி Bonus Share என்றால் என்ன? ஒரு நிறுவனம் தான் சம்பாதிக்கும் லாபம் முழுவதையும் டிவிடென்ட் ஆக பங்குதாரர்களுக்கு கொடுப்பதில்லை. சம்பாதித்ததில் ஒரு பகுதியைத்தான் அதாவது EPS-இன் ஒரு பகுதியைத்தான் டிவிடென்ட் ஆக கொடுக்கும். மீதமுள்ள சம்பாதித்த லாபத்தை நிறுவனம் வைத்திருக்கும். இந்த லாபம் இருப்புநிலை அறிக்கையில் (Balance Sheet) Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று பொறுப்புகள் இருக்கும் பகுதியில் இருக்கும். ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் லாபம் அனைத்தும் பங்குதாரர்களுக்கே சொந்தம். அதனால் சம்பாதித்த லாபம் அத்தனையையும் Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று Balance Sheet இல் வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை Dividend கொடுத்திருந்தால், டிவிடென்ட் கொடுத்து போக மீதமுள்ள லாபம் Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று வைக்கப்பட்டிருக்கும். இப்படி பல வருடமாக சேர்ந்த லாபத்தை - அதாவது சம்பாதித்த லாபத்தில் டிவிடென்ட் கொடுத்தது போக மீதியாக இருக்கும் லாபத்தை - பங்குதாரர்களுக்கு Bonus Share என்று இலவசமாக நிறுவனம் கொடுக்கும் (இப்படி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, நிறுவனம் விரும்பினால் கொடுக்கலாம்) . இப்படி கொடுக்கப்படுவதால், நிறுவனம் வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை கூடி, அதனால் EPS குறையும். Bonus Share கொடுக்கப்படும்போது அங்கே பங்குதாரர்கள் நிறுவனத்திற்கு பணம் தர வேண்டியது இல்லை - அதனால் தான் அதாவது இலவசமாக கொடுக்கப்படுவதால் இதை Bonus என்று சொல்கிறோம்.

Bonus Share என்பது உன்ன்மையிலேயே இலவசம் தானா என்பது பற்றியும், EPS வேறு என்னென்ன விஷயங்களுக்கு பயன்படுகிறது, ஒரு பங்கை வாங்கும் போதோ விற்கும் போதோ EPS-ஐ எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், Share Split என்றால் என்ன என்பது பற்றியும் Share Split என்பது EPS-ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் வரும் பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment