Thursday, September 10, 2009

ஆப்ஷன் - பாகம் 4

நீங்கள் வாங்கி வைத்துள்ள பங்குகளின் விலையை பாதுகாக்கவும் சில ஆப்ஷன் ஒப்பந்தங்கள் உதவும். அந்த மாதிரி ஆப்ஷன் ஒப்பந்தங்களுக்கு "Put" என்று பெயர்.

நீங்கள் கூகுல் (Google) நிறுவனத்தின் 100 பங்குகளை ஒரு பங்கு $390க்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். $39,000 முதலீடு செய்கிறீர்கள். இது ஒரு சாதாரண தொகை அல்ல. ஒரு வேளை இந்த பங்குகளின் விலை ரொம்ப சரிந்து விட்டால் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்கள். அப்போது உங்களிடம் ஒருவர் வந்து "கவலையே படாதீங்க சார்...ஜனவரி 2006க்குள் கூகுல் ஷேர் எந்த விலைக்கு விற்றாலும் சரி, உங்களிடம் உள்ள 100 பங்குகளையும் ஒரு பங்கு 390 டாலருக்கு நானே வாங்கிக்கிறேன்... ஆனால், எனக்கு நீங்கள் 2000 டாலர் கொடுத்து விட வேண்டும், சரியா?" என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

"இது என்ன பம்மாத்து வேலையா இருக்கு? நான் வாங்கின விலைக்கே உங்கிட்ட விக்கனும், கூடவே ரெண்டாயிரம் டாலர் வேற கொடுக்க வேண்டுமா? எத்தனை பேர் இது மாதிரி கிளம்பியிருக்கீங்க?" என்று கொதிப்பீர்களா...ஆமாம் என்றால், இதற்கு மேல் படிக்காதீர்கள்!

"நல்லதா போச்சு...39,000 டாலரை பாதுகாக்க 2000 டாலர் செலவு செய்யலாம். பெரும்பாலும் உங்களிடம் 390 டாலருக்கு இந்த பங்குகளை விற்கும் நிலைமை வராது. ஜனவரியில் கூகுல் லாபத்தை அறிவிக்கும் போது, மார்க்கெட்டை கலக்க போகிறது. இந்த பங்குகள் 450 டாலருக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படியே தப்பி தவறி 390 டாலருக்கு கீழே போய்விட்டால் உங்களிடம் 390க்கு விற்று விட வேண்டியது தான்..." என்று சொல்வீர்களா? உங்களுக்காக தான் இந்த வலைப்பதிவு.

ஒரு நிறுவனத்தின் மேல் நம்பிக்கை வைத்து தான் அதன் பங்குகளை வாங்குகிறோம். கூகுல் நல்ல நிறுவனம் தான். ஆனால் ஒரு பங்குக்கான விலை ரொம்ப அதிகம். வெறும் நூறு பங்குகளை வாங்குவதற்கே $39,000 கொடுக்க வேண்டியிருக்கிறது. $39,000 என்பது கிட்டத்தட்ட 19 மாதங்களின் சேமிப்பு. இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் முழுவதையும் ஒரே நிறுவனத்தை நம்பி போடும்போது மனம் ஊசலாட தான் செய்யும். 39,000 டாலர் முதலீட்டை 2000 டாலரால் பாதுகாக்க முடிந்தால் அது நல்ல விஷயம் தான். இப்படி பாதுகாப்பதற்கு Put ஆப்ஷன் ஒப்பந்தங்கள் உதவும்.

Call ஒப்பந்தங்களும் Put ஒப்பந்தங்களும் ஒரே அடிப்படையில் தான் செயல்படுகின்றன. இன்னும் சில மாதங்களில் குறிப்பிட்ட விலைக்கு பங்குகளை வாங்குவதற்கு Call ஒப்பந்தங்கள் உதவுகின்றது. அதே போல இன்னும் சில மாதங்களில் குறிப்பிட்ட விலைக்கு பங்குகளை விற்க Put ஒப்பந்தங்கள் உதவுகிறது. இந்த இரண்டிலும் ரிஸ்க் அதிகமாக எடுப்பவர் பிரீயம் வாங்கி கொள்கிறார்.

Put ஒப்பந்தங்களை வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள லாப நஷ்டங்களை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

கூகுல் பங்குகள் நவம்பர் 11ம் தேதி $390க்கு விற்கிறது. அதே விலைக்கு 100 பங்குகள் நீங்கள் வாங்குகிறீர்கள். $39,000 முதலீடு. பங்குகளை வாங்கிய கையோடு ஜனவரி 2006, $390க்கான ஒரு Put ஒப்பந்தத்தையும் வாங்குகிறீர்கள். அதற்கு $2000 பிரீமியம் கொடுக்கிறீர்கள். இந்த பிரீமியத்தையும் சேர்த்து மொத்தம் 41,000 டாலர்களை கூகுல் நிறுவனத்தை நம்பி முதலீடு செய்கிறீர்கள்.

ஜனவரி மாதம் 20ம் தேதி அன்று நீங்கள் வாங்கிய Put ஒப்பந்தம் காலாவதியாகி விடும். நவம்பர் 11ம் தேதியிலிருந்து ஜனவரி 20ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் 390 டாலர் விலைக்கு கூகுல் பங்குகள் நூறை விற்று விட உங்களுக்கு உரிமை உள்ளது. ஜனவரி மாதம் 20ம் தேதி அன்று இந்த பங்குகள் $460க்கு விற்பதாக வைத்து கொள்வோம். அப்போது நீங்கள் இந்த பங்குகளை $390க்கு விற்க வேண்டிய அவசியமில்லை. அப்போது உள்ள நிலைமையை பொறுத்து நீங்கள் முடிவெடுக்கலாம். $440க்கு ஸ்டாப் லாஸ் போட்டு வைத்து கொள்ளலாம் அல்லது $460க்கு அத்தனை பங்குகளையும் விற்று விடலாம் அல்லது உங்களிடம் உள்ள பங்குகளுக்கு Covered Call விற்று விடலாம். எல்லாமே உங்கள் இஷ்டம் தான். Put ஒப்பந்தத்தை உங்களிடம் விற்றவர் உங்கள் பங்குகளுக்கு உரிமை கொண்டாட முடியாது.

ஜனவரி 20, 2006 அன்று $460க்கு நீங்கள் 100 பங்குகளையும் விற்பதாக வைத்து கொள்வோம். நீங்கள் $41,000 முதலீடு செய்திருக்கிறீர்கள் ($2000 பிரீமியத்தையும் சேர்த்து). ஒரு பங்கு $460 வீதம் விற்பதால் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் $46,000. உங்களின் மொத்த லாபம் $5,000.

ஒரு வேளை ஜனவரி 20ம் தேதி அன்று கூகுல் பங்குகள் $200க்கு போய் விட்டால் என்ன செய்வது? $390க்கு இந்த பங்குகளை விற்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் தரகரின் மூலம் ஒரு பங்கு $390 வீதம் 100 பங்குகளையும் $39,000க்கு நீங்கள் விற்று விடலாம். இப்படி உங்கள் உரிமையை நிலை நாட்டுவதற்கு "Exercising your options" என்று பெயர். சில தரகர்கள் வலைத்தளம் மூலம் ஆப்ஷன் Exercise செய்ய அனுமதிப்பார்கள். சில தரகர்களிடம் தொலைபேசி மூலம் பேசி தான் இதை செய்ய முடியும். எப்படி செய்தாலும் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், பங்கு சந்தை திறந்தவுடன் செய்வது நல்லது.

இப்படி $390க்கு நீங்கள் பங்குகளை விற்று விட்டால், உங்களுக்கு $2000 நஷ்டம். இந்த 2000 டாலரும் Put ஒப்பந்தத்திற்காக செலவு செய்தது. ஒரு வேளை Put ஒப்பந்தம் வாங்காமல் இருந்திருந்தால்...? $19,000 நஷ்டம்.

நிம்மதியை விலைக்கு வாங்க முடியாது என்று நம் கவிஞர்கள் நிறைய கவிதை பாடியிருக்கிறார்கள். ஆனாலும், பங்குகள் விஷயத்தில் நிம்மதியை விலைக்கு வாங்கலாம். உங்களுக்கு $2000 பிரீமியம் கொடுக்க மனசில்லையன்றால் ஜனவரி 2006, $340 Strike priceக்கு Put ஒப்பந்தம் வாங்கலாம். அதன் பிரீமியம் $500 தான். ஆனால் வாங்கிய விலையை விட ($390) குறைந்த விலைக்கு தான் ($340) விற்க முடியும். Call ஒப்பந்தத்தில் Strike price உயர உயர ஆப்ஷன் பிரீமியம் குறையும். Put ஒப்பந்தத்தில் அப்படியே அது உல்டா -- Strike price உயர உயர ஆப்ஷன் பிரீமியம் அதிகமாகும்.

கூகுல் நிறுவனத்தின் ஆப்ஷன் விலைகள் மிக அதிகம், அதற்கு காரணம் Volatility. அதைப்பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். நீங்கள் Yahoo, IBM போன்ற பங்குகளின் Put ஆப்ஷனை வாங்கினால் பிரீமியம் குறைவாக இருக்கும்.

Put ஒப்பந்தத்தை உங்களிடம் விற்றவரின் நோக்கம் என்ன, அவர் எப்படி லாபம் சம்பாதிப்பார் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

கொசுறு செய்தி: அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுக்கும் Put ஆப்ஷன் கொண்டு வர ஒரு சில வங்கிகள் முயற்சி செய்து வருகின்றன. ஒரு மாநிலத்தில் சோதனை முயற்சி நடந்து வருகிறது. அது வெற்றி பெற்றால், எல்லா மாநிலத்திலும் கொண்டு வருவார்கள். அப்படி நடந்தால் வீடு விலை சரிவதை பற்றி அதிகமாக கவலைப்படாமல் வீடு வாங்கலாம்.

No comments:

Post a Comment