Thursday, September 10, 2009

ஆப்ஷன் - பாகம் 1

ஆப்ஷன் பற்றி பேசும்போது தமிழ் வார்த்தைகளை உபயோகிக்கத்தான் ஆசையாக உள்ளது. ஆனால் பங்கு சந்தையில் நிறைய வார்த்தைகள் தமிழில் சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை. உதாரணமாக, ஆப்ஷனை தமிழில் "தேவையானதை தெரிவு செய்யும் முறை" என்று சொல்ல வேண்டும். Derivatives என்பதற்கு "மூலப் பொருளிலிருந்து பெற்றவை". ஆப்ஷன் பற்றி விளக்கும் போது சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதினால் எனக்கு விளக்க சுலபமாக இருக்கும்.

எனக்கு IBM பங்குகளை வாங்க வேண்டும் என்று ஆசை. இன்று ஒரு பங்கின் விலை $80. நூறு பங்குகளை வாங்குவதென்றால் நான் $8000 கொடுக்க வேண்டும். என்னிடம் அவ்வளவு பணம் இன்று இல்லை. ஜனவரி மாதத்தில் என்னுடைய கம்பெனியிடமிருந்து $10,000 போனஸ் எதிர்பார்க்கிறேன், அப்போது என்னால் இந்த பங்குகளை வாங்க முடியும். ஆனால் ஜனவரியில் இந்த பங்குகள் $100க்கு மேல் போய் விட்டால் என்ன செய்வது என்று மனதுக்குள் குடைச்சல். இந்த மாதிரி சமயத்தில் தான் ஆபத்பாந்தவனாக ஆப்ஷன் உதவி செய்யும். IBM பங்குகளை இன்று ராமசாமி என்பவர் விற்க விரும்புகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் போய் "சார், ஜனவரி வரை பொறுத்திருங்கள். அப்போது 100 பங்குகளை உங்களிடமிருந்து ஒரு பங்குக்கு $80 விலையில் நான் வாங்கிக் கொள்கிறேன். இதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால், இன்றே உங்களுக்கு நான் $300 ப்ரீமியம் தருகிறேன்" என்று நான் ஒப்பந்தம் போட்டால், அது தான் ஆப்ஷன் ஒப்பந்தம்.

மேலே சொன்ன ஆப்ஷன் ஒப்பந்த்ததிற்கு "Call" என்று பெயர். 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நான் $8000 ராமசாமியிடம் கொடுத்தால் அவர் எனக்கு 100 IBM பங்குகளை கொடுத்து விடவேண்டும். ஜனவரியில் ராமசாமி மனம் மாறி பங்குகளை விற்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது? "வார்த்தை தவறி விட்டாய் ராமசாமி" என்று பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருக்க முடியாது. தரகர்களின் மூலம் வாங்கி விற்கும் போது இந்த பிரச்னை இல்லை. ஜனவரி மாதம் வரும்போது IBM பங்கின் விலை $90 என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயம் என் Call ஒப்பந்தத்தை நான் அமுல்படுத்தி IBM கம்பெனியின் 100 பங்குகளை ராமசாமியிடமிருந்து ஒரு பங்குக்கு $80 என்ற கணக்கில் நான் வாங்கிகொள்ளலாம். நான் மொத்தமாக செலவு செய்தது ($80 * 100) + ($300) = $8300. ($300 நான் கொடுத்த ப்ரிமீயம்) ஆனால் எனக்கு கிடைத்ததோ $9000 மதிப்புள்ள பங்குகள். இந்த மாதிரி விளையாட்டு விளையாடியதில் $700 லாபம்.

இந்த Call ஒப்பந்ததில் எப்பொதும் லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஜனவரியில் IBM பங்கு $40க்கு விழுந்து விடுகிறது என்று வைத்துக்கொள்வோம், நான் ராமசாமியிடமிருந்து $80க்கு பங்குகளை வாங்க மாட்டேன். அதெப்படி ராமசாமி பின் வாங்க முடியாது, நான் பின்வாங்கலாம்? Call ஒப்பந்தத்தில் அது ஒரு சௌகரியம். நான் $300 ப்ரீமியம் கட்டுகிறேன் அல்லவா, அதற்கு கிடைக்கும் சலுகை. என்ன, நான் கட்டிய $300 ப்ரிமீயத்தை ராமசாமி திருப்பி தரமாட்டார். $40 பங்குக்கு $80 விலை கொடுப்பதை விட (100 பங்குகளுக்கு நஷ்டத்தை நூறால் பெருக்குங்கள்) $300 நஷ்டம் ஒன்றும் பெரிய விஷயமாக தெரியாது. இது ஒரு இன்சூரன்ஸ் மாதிரி தான்.

இந்த Call ஒப்பந்ததில் நான் IBM பங்குகளின் விலை உயரும் என்று கணக்கு போடுகிறேன், ராமசாமி அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று கணக்கு பொடுகிறார். யார் கணக்கு சரியாக இருக்கிறதோ அவருக்கு லாபம்.

இந்த Call ஒப்பந்ததை வைத்து வெவ்வேறு வழிகளில் பணம் பண்ணலாம்.

என்னை போன்ற ஆட்கள் Call ஒப்பந்தத்தின் மூலம் பங்குகளை விற்பதற்காகவே பங்குகளை வாங்குவதுண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்னால் BTU (Peapod Energy) கம்பெனியின் 100 பங்குகளை ஒரு பங்கு $75.64 விலைக்கு வங்கினேன். வாங்கிய இரு வினாடிகளிலே அக்டோபர் 21, 2005க்குள் இந்த நூறு பங்குகளையும் ஒரு பங்கு $75 விலைக்கு விற்க ஒப்புக்கொள்வதாக ஊர் பேர் தெரியாத ஒரு ஆளிடம் Call ஒப்பந்தம் செய்துகொண்டேன். இதனால் எனக்கு கிடைத்த ப்ரிமீயம் $300. அதென்ன அக்டோபர் 21 கணக்கு? ஆப்ஷன் ஒப்பந்தங்கள் அனைத்தும் மாதத்தின் மூன்றாவது வெள்ளியன்று காலாவதியாகும். அக்டோபர் 2005 Call என்பதால் அக்டோபர் 21, 2005 அன்று காலாவதியாகும். இதுவே நவம்பர் 2005 Call என்றால், அது நவம்பர் 18 அன்று காலாவதியாகும்.

சிலர் தன்னிடம் இருக்கும் பங்குகளை வாடகைக்கு விடுவதாக நினைத்துக்கொண்டு Call ஒப்பந்தங்களை விற்பதுண்டு. என்னிடம் 100,000 மைக்ரோசாப்ட் பங்குகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம் (நினைத்தாலே இனிக்கிறது!). இந்த பங்குகள் ரொம்ப நாளாக $24 - $26 என்ற ரேஞ்சிலேயே பரிவர்த்தனை (Trade) ஆகிக் கொண்டிருக்கின்றன. போட்ட பணம் முழுதும் சும்மா முடங்கி கிடக்கிறது. 100,000 பங்குகளையும் நவம்பர் 2005க்குள் ஒரு பங்கு $27.50 என்கிற விலைக்கு விற்க நான் ஒப்புக்கொண்டால் எனக்கு ப்ரீமியம் மட்டுமே $50,000 கிடைக்கும். நவம்பர் 18, 2005க்குள் மைக்ரோசாப்ட் பங்குகள் $27.50க்கு போவதற்கான வாய்ப்புகள் ரொம்ப கம்மி. இப்படி கொஞ்சம் கணக்குப்போட்டு ரிஸ்க் எடுத்து பங்குகளை “வாடகைக்கு” விற்று சம்பாதிக்கும் பெரும் பணக்காரர்கள் நிறைய பேர் உண்டு.

இப்படிப் பட்ட பணக்காரர்களிடம் ஏமாந்து போகும் சாதாரண மனிதர்களைப் பற்றி அடுத்த பாகத்தில்...

பின்குறிப்பு: அமெரிக்க மார்க்கெட்டை உதாரணமாக நான் காட்டினாலும், இந்த தொடர் எந்த நாட்டுக்கும் பொருந்தும்.
Bharathi
Tamilnithi.blogspot.com

No comments:

Post a Comment