Thursday, September 10, 2009

ஆப்ஷன் - பாகம் 5

ஆப்ஷன்களிலே ரொம்ப கவர்ச்சியானது Put ஆப்ஷனை விற்பது. கவர்ச்சியென்றால் கூடவே ஆபத்தும் கை கோத்துக்கொண்டு வரும். இந்த ஆப்ஷனை சரியான முறையில் கையாண்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். கொஞ்சம் அசந்து விட்டாலும் முதலுக்கே மோசமாகி விடும்.

இந்த ஆப்ஷன் ஏன் கவர்ச்சியானது? முதல் போடாமலே வருமானம் கிடைக்கும். அது தான் காந்தம் போல நிறைய பேரை சுண்டி இழுக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்த அத்தனை ஆப்ஷன்களுக்கும் முதல் போட வேண்டும்.

• Call ஆப்ஷனை வாங்குவதற்கு பணம் வேண்டும்.
• Call ஆப்ஷனை விற்பதற்கு பங்குகளை வைத்திருக்க வேண்டும், அந்த பங்குகளை வாங்குவதற்கு பணம் வேண்டும்.
• Put ஆப்ஷனை வாங்குவதற்கும் பணம் வேண்டும்.
• ஆனால் Put ஆப்ஷனை விற்பதற்கு மட்டும் பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வழக்கம் போல ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். Google பற்றியே பேசி கொஞ்சம் அலுத்து விட்டது. பில் கேட்ஸை கொஞ்சம் வம்புக்கு இழுப்போம்.

எட்டு வருடங்களுக்கு முன்னால் வாகினி என்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 1000 பங்குகளை ஒரு பங்கு $15 விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார். $15,000 முதலீடு செய்திருக்கிறார். இந்த பங்குகள் $60 விலை வரை சென்று தற்போது $28க்கு விற்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெற்று விடலாம் என்ற சிந்தனையில் வாகினி இருக்கிறார். அந்த சமயத்தில் இந்த பங்குகளை விற்று விடலாம் என்று அவருக்கு எண்ணம் இருக்கிறது. ஆனால் ஒரு உறுத்தல். "ஒரு வேளை இந்த பங்குகள் $15க்கு கீழே போய் விட்டால்?". Mini-Microsoft என்ற ஒரு வலைப்பதிவும் அவரை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. "எதற்கு வம்பு, பேசாமல் Put ஆப்ஷனை வாங்கி வைத்து விடலாம்" என்று முடிவெடுக்கிறார்.

வாகினியிடம் 1000 பங்குகள் இருக்கிறது. ஒரு Put ஒப்பந்தம் 100 பங்குகளை தான் பாதுகாக்கும். எனவே அவர் 10 Put ஒப்பந்தங்களை வாங்க வேண்டும். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து இந்த பங்குகளை விற்க போவதால், ஜனவரி 2008க்கான $30 Put பத்து ஒப்பந்தங்களை $3000 கொடுத்து வாங்குகிறார். ஏற்கனவே பங்குளை வாங்குவதற்கு $15,000 முதலீடு செய்துள்ளார். இப்போது ஆப்ஷன் வாங்குவதற்கு $3,000 முதலீடு செய்திருக்கிறார். மொத்தம் $18,000 முதலீடு. இவர் நிச்சயமாக நஷ்டமடைய போவது கிடையாது. ஜனவரி 2008க்குள் எப்போது வேண்டுமானாலும் அவரிடம் உள்ள மைக்ரோசாப்ட் பங்குகள் ஆயிரத்தை $30,000க்கு விற்று விட அவருக்கு உரிமை இருக்கிறது.

விவேக் என்பவர் வாகினிக்கு Put ஒப்பந்தங்களை விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். வாகினி கொடுக்கும் $3000 பணமும் விவேக்கின் கைக்கு போய்விடும். வாகினியிடமிருந்து 1000 மைக்ரோசாப்ட் பங்குகளை $30க்கு வாங்கி கொள்வதாக கொடுத்த வாக்குறுதிக்கு கிடைத்த தொகை.

Put ஆப்ஷன் விற்பது செக்ஸியாக இருப்பதற்கு இன்னொரு காரணம்: Call ஒப்பந்தங்களை விற்பதற்கு விவேக்கின் கைவசம் பங்குகள் இருக்க வேண்டும். ஆனால் Put ஒப்பந்தங்களை விற்பதற்கு விவேக்கின் கைவசம் பங்குகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நினைத்தால் அவர் விரும்பிய படி எத்தனை Put ஒப்பந்தங்களையும் விற்கலாம். அதற்கான பணம் அவருக்கு கிடைத்து விடும்.

ஒரு வேளை வாகினி பங்குகளை $30,000க்கு விற்க முயலும்போது விவேக்கினால் வாங்க முடியாமல் போய் விட்டால், விவேக்கின் தரகர் வம்பில் மாட்டிக்கொள்வார். இந்த ஒரு காரணத்துக்காகவே நீங்கள் Put ஒப்பந்தங்களை விற்பதற்கு பெரும்பாலான தரகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆப்ஷனில் உங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது என்று அவர்கள் நம்பினால் தான் உங்களுக்கு இந்த சலுகையே கொடுப்பார்கள். இந்த சலுகை இருந்தாலும் உத்தரவாத தொகையை (Margin requirement) உங்கள் கணக்கில் நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

மேலே சொன்ன உதாரணத்தில் Put ஒப்பந்தங்களை விற்பதற்கான கமிஷன் தொகையை தவிர வேறு எந்த பணமும் விவேக் தன் தரகருக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் $6000 பணத்தை உத்தரவாத தொகையாக தன் கணக்கில் வைத்து கொள்ள வேண்டும். இந்த உத்தரவாத தொகையின் மதிப்பு தரகரை பொறுத்து வேறுபடும். Optionsxpress போன்ற தரகர்களிடம் 20% உத்தரவாத தொகை கொடுத்தால் போதும். (20 % * $30,000 = $6,000). சில தரகர்கள் 50% உத்தரவாத தொகை கேட்பார்கள். இந்த மாதிரி குறைந்த பணத்தை வைத்து அதிக மதிப்புள்ள பங்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு "Leverage" என்று பெயர். இது இரு முனைகளிலும் கூர்மையான கத்தி (Double edged sword). இதை கவனமாக கையாண்டால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும்.

மைக்ரோசாப்ட் பங்குகள் விழுந்து விடுமோ என்ற பயத்தில் வாகினி Put ஒப்பந்தங்களை வாங்குகிறார். எந்த தைரியத்தில் விவேக் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த ஒப்பந்தங்களை விற்கிறார்? Jan 2008க்குள் ஒரு வேளை இந்த பங்குகள் $10க்கு போய்விட்டால் விவேக்கிற்கு எக்கசக்கமாக நஷ்டமாகி விடுமே? விவேக்கின் நோக்கத்திற்கு பின்னால் பல காரணங்கள் உண்டு.

1. அவருக்கு மைக்ரோசாப்ட் பங்குகளின் மேல் அளவு கடந்த காதல். கூகுலின் இள வட்டங்கள் ஆர்வக்கோளாறில் சீக்கிரமே ஏதாவது வம்பில் மாட்டிக் கொள்ள போகிறார்கள் என்று தீவிரமாக நம்புகிறார். மைக்ரோசாப்ட் இப்போது விழித்துக்கொண்டு Search Engine-ல் முழு கவனம் செலுத்துகிறது, இன்னும் இரண்டு வருடங்களில் மைக்ரோசாப்ட் கூகுலை முழுசாக விழுங்கி விடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.

2. ஜனவரி 2008ல் மைக்ரோசாப்ட் பங்குகளை $30,000க்கு வாகினியிடமிருந்து வாங்கினாலும் அவர் செலவழிக்கும் தொகை $27,000 மட்டும் தான் (Put ஒப்பந்தங்களை விற்றதில் அவருக்கு ஏற்கனவே $3,000 கிடைத்திருக்கிறது). தள்ளுபடி விற்பனையில் மைக்ரோசாப்ட் பங்குகளை வாங்குவதில் அவருக்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லை.

3. ஒரு வேளை மைக்ரோசாப்ட் பங்குகள் கீழே சரிந்து கொண்டே இருந்தால் அதிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள Stop loss போட்டு விட்டால் அதிக நஷ்டமாகாது என்று கணக்கு போடுகிறார்

4. மைக்ரோசாப்டில் ஏதாவது பிரச்னையென்றால் கோல்ப் விளையாடும் போது பில் கேட்ஸ் தன்னிடம் சொல்வார். அதை பொறுத்து மேலும் முடிவெடுக்கலாம் என்று யோசிக்கிறார்.

மேலே சொன்னதில் நீங்கள் ஊகித்த படி நாலாவது காரணம் மட்டும் நான் சுற்றிய ரீல். அது உண்மையாக கூட இருக்கலாம், நம் ஊரிலிருந்து வந்த நிறைய பணக்காரர்கள் பில் கேட்ஸ்க்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும் மைக்ரோசாப்ட் பங்குகள் மீது விவேக்கிற்கு நம்பிக்கை இருக்கிறது. வாகினிக்கு நம்பிக்கை இல்லை. தன் பயத்துக்கு மருந்தாக Put ஒப்பந்தங்களை வாகினி வாங்குகிறார். அந்த பயத்தை பயன்படுத்தி Put ஒப்பந்தங்களை விவேக் விற்கிறார்.

மேலே சொன்ன உதாரணத்தில் வரவு செலவு கணக்குகளை பார்க்காமல் விட்டால் இந்த பாகம் முழுமை பெறாது.

ஜனவரி 2008-ல் மைக்ரோசாப்ட் பங்குகள் எந்த விலைக்கு விற்கும் என்று நமக்கு தெரியாது. அதனால் இருக்கும் அத்தனை வாய்ப்புகளையும் அலசுவோம்.

1. மைக்ரோசாப்ட் பங்குகள் இப்போதைய விலையை விட அதிகமாகி $40க்கு விற்கலாம்.அப்படி நடந்தால் விவேக் விற்ற Put ஒப்பந்தங்கள் காலாவதியாகி விடும். அவருக்கு $3,000 லாபம். $6,000 உத்தரவாத தொகையை தரகர் கணக்கில் வைத்திருந்தார். அந்த $6,000க்கு $3,000 லாபம், 50% லாபம்! வாகினி தன்னிடம் உள்ள 1000 பங்குகளை $40,000க்கு விற்று விடுவார். அவருக்கு $22,000 லாபம். எப்படி $22,000 லாபம் என்று நீங்கள் கேள்வி கேட்டால் ஸ்ரீராமஜெயம் நூறு முறை எழுத வேண்டும்.

2. மைக்ரோசாப்ட் பங்குகள் இப்போதைய விலையை விட குறைந்து $10க்கு விற்கலாம்.அப்படி நடந்தால் ஒரு பங்கு $30 விலைக்கு வாகினி தன்னிடம் உள்ள ஆயிரம் பங்குகளையும் $30,000 விலைக்கு விற்று விடுவார். Put ஒப்பந்தங்கள் அவரை பாதுகாத்து விடும். Stop loss எதுவும் போடாமல் இருந்திருந்தால் விவேக்கிற்கு நஷ்டம். $10,000 மதிப்புள்ள பங்குகளை $30,000க்கு வாங்க வேண்டும். ஏற்கனவே Put ஒப்பந்தங்களை விற்றதிலிருந்து $3,000 கிடைத்திருப்பதால் நஷ்டம் கொஞ்சம் குறையும். ஆனாலும் $17,000 ($30,000-$10,000-$3,000) நஷ்டம்.

3. மைக்ரோசாப்ட் பங்குகள் இப்போதைய விலைக்கே ($28) விற்கலாம்.அப்படி நடந்தால் வாகினி தன்னிடம் உள்ள Put ஒப்பந்தங்களை பயன்படுத்தி 1000 பங்குகளை $30,000க்கு விற்று விடுவார். அவர் $15,000 முதலீடு செய்திருந்தார். கூடவே Put ஒப்பந்தங்களை வாங்க $3,000 செலவு செய்திருந்தார். மொத்தம் $18,000 செலவு. பங்குகளை $30,000க்கு விற்று விடுவதால் வாகினிக்கு $12,000 லாபம். இப்போது விவேக்கிற்கு எவ்வளவு நஷ்டமாகியிருக்கும்? ஒரு பைசா கூட அவருக்கு நஷ்டமாகியிருக்காது! அவர் விற்ற ஒப்பந்தங்களின் விலை $3000த்திலிருந்து $2000க்கு குறைந்திருக்கும். இது எப்படி சாத்தியம் என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம். ஒப்பந்தங்களின் விலை குறைந்ததால் விவேக்கிற்கு $1,000 லாபம்.

பொதுவாக கீழ்க்கண்ட விதிகளை கடைபிடித்தால் Put ஒப்பந்தங்களை விற்பதிலிருந்து லாபம் பெறலாம்.

1. எந்த பங்குகளுக்காக Put ஒப்பந்தங்களை விற்கிறீர்களோ அந்த பங்குகளின் நிறுவனத்தின் மேல் உங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்க வேண்டும். ஏதோ ஒரு பத்திரிகையில் வந்த Stock tips-ஐ பார்த்து விட்டு Put ஒப்பந்தங்களை விற்றால் பெரும்பாலும் நஷ்டம் தான் கிடைக்கும்.

2. ஸ்டாப் லாஸ் ரொம்ப அவசியம். பங்குகளுக்கு வாங்கிய விலையை விட 8%-10% குறைவாக ஸ்டாப் லாஸ் போடுவோம். ஆனால் ஆப்ஷனுக்கு 10% ஸ்டாப் லாஸ் போட்டால் பேஜாராகி விடும். அதிக சதவிகிதத்தில் ஸ்டாப்லாஸ் போட வேண்டும். இதை விளக்குவது கொஞ்சம் கடினம். அடுத்த பாகத்தில் முயற்சி செய்து பார்க்கிறேன். சுருக்கமாக சொல்ல போனால் உங்களால் எவ்வளவு நஷ்டத்தை தாங்க முடியுமோ அந்த விலைக்கு ஸ்டாப் லாஸ் போடுவது நல்லது.

3. 6 மாதத்துக்குள் உள்ள ஆப்ஷன் ஒப்பந்தங்களை விற்றால் நல்லது. உதாரணமாக இப்போது நீங்கள் ஆப்ஷன் ஒப்பந்தங்களை விற்க விரும்பினால் மே 2006க்குள் உள்ள ஒப்பந்தங்களை விற்பது நல்லது.

4. பங்குகள் விற்கும் விலைக்கு அருகாமையில் உள்ள Strike price-ல் ஒப்பந்தங்களை விற்க வேண்டும். உதாரணமாக மைக்ரோசாப்ட் இன்று $28க்கு விற்கிறது. மார்ச் 2006க்கான $30 ஒப்பந்தங்களை விற்கலாம் அல்லது $25க்கான ஒப்பந்தங்களை விற்கலாம்.

பில் கேட்ஸ், மைக்கேல் டெல் போன்றவர்கள் அடிக்கடி தங்கள் நிறுவனத்தின் Put ஒப்பந்தங்களை விற்கிறார்கள். இவர்களின் நோக்கமே தங்கள் நிறுவன பங்குகளை பொது மக்களிடமிருந்து சகாய விலைக்கு வாங்குவது தான். தங்கள் நிறுவனங்களின் தலைவிதியை பற்றி இவர்களை விட அதிகமாக யாருக்கு தெரிய போகிறது?! அதனால் தைரியமாக Put ஒப்பந்தங்களை விற்கிறார்கள்.

இன்னும் இரண்டு பாகங்கள் இருக்கிறது….

No comments:

Post a Comment