Thursday, September 10, 2009

நஷ்டத்தை நிறுத்து!

"Stop Loss" என்றால் என்ன? "Stop the Loss!" பங்கு சந்தையில் லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும். நஷ்டமே வரக்கூடாது என்று ஒருவர் நினைத்தால் அவர் பங்கு சந்தையில் பணத்தை போடவே கூடாது. நஷ்டத்தை குறைத்து லாபத்தை அதிகப் படுத்துவது தான் ஸ்டாப் லாஸின் வேலை.

எல்லா தரகர்களுமே பங்குகளுக்கு ஸ்டாப் லாஸ் முறையை உபயோகப் படுத்த அனுமதிக்கிறார்கள். வெகு சில தரகர்களிடம் மட்டும் ஆப்ஷனுக்கு ஸ்டாப் லாஸ் அனுமதிக்க கூடிய தொழில் நுட்பம் உள்ளது. பங்குகளை மையமாக வைத்து ஸ்டாப் லாஸ் பற்றி பேசுவோம், எல்லோருக்கும் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.

* * *

நவம்பர் 4, 2005:

Sandisk நிறுவனத்தின் 100 பங்குகளை ஒரு பங்கு $64க்கு வாங்குகிறேன். $6400 முதலீடு. இந்த நிறுவனம் செல் போன், டிஜிடல் கேமராக்களில் இருக்கும் Memory chips போன்ற சமாச்சாரங்களை தயாரிக்கிறது. கிறிஸ்துமஸ், புது வருட கொண்டாட்ட காலங்களில் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும். டிசம்பர் கடைசியில் இந்த பங்கு $75க்கு போகும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி நடந்தால் என்க்கு $1100 லாபம். ஓரு வேளை அது நடக்காமல் போய்விட்டால்? ஏதாவதொரு பிரச்னையில் இந்த பங்குகளின் விலை சரிந்து விட்டால்? எதற்கும் இருக்கட்டுமென்று 100 பங்குகளுக்கும் $59 விலைக்கு ஸ்டாப் லாஸ் ஆர்டரை கொடுத்து விடுகிறேன். இன்று பங்கு சந்தை முடியும் போது இந்த பங்குகளின் விலை $66. மனசில் சந்தோஷம்.

நவம்பர் 7, 2005:

Goldman Sachs நிறுவனத்தில் பங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஓரு புண்ணியவானுக்கு திடீரென்று ஞானோதயம் வருகிறது. Sandisk விற்பனை செய்யும் Memory Chips விலை குறைய வாய்ப்பிருக்கிறது, அதனால் இந்த பங்குகளின் எதிர்காலம் அவ்வளவு ஒன்றும் பிரகாசமாக இல்லை என்று அறிக்கை விடுகிறார்.

பங்கு சந்தை திறந்தவுடன் Sandisk பங்குகளின் விலை $64க்கு விற்க ஆரம்பிக்கிறது. மூன்று மணி நேரத்திற்குள் $60க்கு விழுந்து விட்டது. Goldman ஆள் மேல் எரிச்சலாக வருகிறது. இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை மூன்று நாட்களுக்கு முன்பே சொல்லியிருக்க கூடாதா?

நவம்பர் 8, 2005:

பங்கு சந்தை திறப்பதற்கு முன்பே மேலும் மூன்று வங்கிகளின் ஆராய்ச்சிக் குழுவினர் "Goldman Sachs ஆள் சொன்னது சரி தான், இந்த நிறுவனத்துக்கு இன்னும் 4 மாதம் ஏழரை நாட்டு சனி” என்று சொல்லி வைக்கிறார்கள்.

பங்கு சந்தை திறக்கும் போது Sandisk பங்கு $59க்கு விற்க ஆரம்பிக்கிறது. உடனே எனது ஸ்டாப் லாஸ் ஆர்டர் வேலை செய்ய ஆரம்பிக்கிறது. என்னுடைய 100 பங்குகளையும் $59 விலைக்கு தரகர் விற்று விட்டார்.

பங்கு சந்தை மூடும் போது இந்த பங்குகள் $45க்கு விற்கிறது. இனி மேல் எந்த வருடத்திலும் நவம்பர் நாலாம் தேதியன்று பங்குகளை வாங்க கூடாது என்று முடிவு செய்கிறேன். நஷ்டமடைந்த $500க்கு ஒரு நல்ல டிஜிடல் கேமரா வாங்கியிருக்கலாமே என்று தொன்றுகிறது.

நவம்பர் 11, 2005:

Sandisk பங்குகளின் விலை $30. ஸ்டாப் லாஸ் என்ற உத்தியை கண்டு பிடித்தவர்களுக்கு நன்றி. அது மட்டும் போடாமல் இருந்திருந்தால் இன்று $3400 நஷ்டமாக இருந்திருக்கும்.


* * *

இது தான் ஸ்டாப் லாஸ். உங்களால் எவ்வளவு நஷ்டத்தை தாங்க முடியுமோ, அந்த நஷ்ட எல்லைக்கு பங்குகள் விழும் போது அதை விற்று விட வேண்டும். Sandisk போன்ற வேகமாக மேலே ஏறிய பங்குகள் அதே வேகத்தில் கீழே விழும். எவ்வளவு தூரம் விழும் என்று யாருக்கும் தெரியாது. அது கூடவே நாமும் விழுவதை விட நம்முடைய "Comfort Zone"-ஐ அந்த பங்கு தாண்டும் போது அந்த விளையாட்டிலிருந்து விலகிக் கொள்வது நல்லது.

ஓரு முக்கியமான விஷயம். மேலே சொன்ன உதாரணத்தில் நவம்பர் 8ம் தேதியன்று பங்கு சந்தை திறக்கும் போது Sandisk பங்குகள் $55க்கு விற்க ஆரம்பித்தால் ஸ்டாப் லாஸ் ஆர்டர் என் பங்குகளை $55க்கு விற்று விடும். $59க்கு ஸ்டாப் லாஸ் என்பதன் அர்த்தம் என்னவென்றால் “இந்த பங்குகள் $59 அல்லது அதற்கும் கீழே போகும் போது விற்று விடு”. ஸ்டாப் லாஸ் விலையை பங்குகள் அடைந்தவுடன் இந்த ஆர்டர் மார்க்கெட் ஆர்டராக மாறிவிடும். ஸ்டாப் லாஸ் விலையை விட குறைவான விலைக்கு பங்குகள் விற்கப்படுவது அபூர்வம். குறிப்பிட்ட நிறுவனத்தைப்பற்றி ரொம்ப கெட்ட செய்தி வந்தால் மட்டுமே அது நடக்கும்.

இப்பொது என் முகத்திலுள்ள பெசிமிஸ்ட் முகமூடியை தூக்கியெறிந்து விட்டு, ஆப்டிமிஸ்ட் முகமூடியை போட்டுக் கொள்கிறேன். ஓரு வேளை இந்த பங்குகளின் விலை $59க்கும் கீழே போகாமல் இருந்தால்? (Sliding Doors படம் பார்த்திருக்கிறீர்களா? தமிழில் 12B.)

நவம்பர் 8, 2005:

Sandisk நிறுவனத்தை சோனி நிறுவனம் விலைக்கு வாங்க யோசிக்கிறது என்று ஒரு தகவல். பங்கு சந்தை திறக்கும் போது இந்த பங்குகளின் விலை $74. பங்கு சந்தை முடியும் போது விலை $78. என்னுடைய ஸ்டாப் லாஸ் ஆர்டரை $59-லிருந்து $69க்கு மாற்றி விட்டேன்.


நவம்பர் 11, 2005:

ஆப்பிள் நிறுவனம் ஸான்டிஸ்க் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. பங்கு சந்தை திறப்பதற்கு முன்பே ஸான்டிஸ்க் நிறுவனத்தை ஒரு பங்கு $100 விலைக்கு வாங்க ஆப்பிள் ஒத்துக்கொள்கிறது. பங்கு சந்தை திறக்கும் போது ஸான்டிஸ்க் பங்குகளின் விலை $107. என்னுடைய ஸ்டாப் லாஸ் விலையை $69லிருந்து $100க்கு மாற்றி விடுகிறேன்.


ஏன் இப்படி ஸ்டாப் லாஸ் விலையை மாற்றிக்கொண்டே போக வேண்டும்? இந்த மாதிரி Bidding war நடக்கும் போது பங்குகளின் விலை ஊசலாடும். முடிந்த வரை லாபத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக செய்யும் உத்தி இது. ஓரு வேளை ஆப்பிள் பங்கு தாரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்த பங்குகளின் விலை திரும்பவும் $78 ரேஞ்சுக்கு போய் விடும்.

முடிப்பதற்கு முன் சில வார்த்தைகள்: $64க்கு வாங்கிய பங்குகளுக்கு $59 விலைக்கு தான் ஸ்டாப் லாஸ் போட வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. 8% - 10%க்கு மேல் நஷ்டம் அடைந்தால் விற்று விடுவது நல்லது. 8 சதவிகிதம் கணக்கு போட்டால் பங்கு விலை $64க்கு $59 ஸ்டாப் லாஸ் சரியாக இருக்கும். எல்லா ஸ்டாப் லாஸ் ஆர்டருகளும் GTC (Good till cancelled) ஆர்டர்களாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment